நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக, ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் டிசம்பர் 25ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று(டிச.26) வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், 'ரஜினிகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் கவலைப்படும்படி ஏதுமில்லை. இருப்பினும், தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறார். ரத்த அழுத்த மாறுபாடு கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் டிஸ்சார்ஜ் செய்வது பற்றி இன்று முடிவு செய்யப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 3 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ரஜினிகாந்த் இன்று (டிச.27) மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இந்தத் தகவலை ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணா உறுதி செய்தார். இதுதொடர்பாக சத்திய நாராயணா கூறும்போது, 'ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டால், இரவிலோ அல்லது நாளையோ சென்னை திரும்புவார்' எனக் கூறியுள்ளார். சென்னை திரும்பிய பிறகு ரஜினிகாந்த் வீட்டிலேயே ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார்.