நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கியது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஷிப்பிங் கார்பரேசன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை நவம்பர் 20ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் நேற்று காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.
இதனைத் தொடர்ந்து ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயல் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். இதுகுறித்து அவர், "ரயில்வே துறை முழுமையாக தனியார்மயமாக்கப்படவில்லை. பயணிகளுக்கு வசதிகள் செய்துதரவே குறிப்பிட்ட சேவைகள் மட்டுமே தனியாருக்கு விடப்படுகிறது. அடுத்த 12 ஆண்டுகளுக்கு ரயில்வேதுறையை இயக்க 50 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதுபோன்ற பெரிய தொகையை அரசால் ஈட்டமுடியாது. எனவேதான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறந்த சேவைகள் அளிப்பதே எங்கள் நோக்கம். ரயில்வே துறையை தனியார்மயமாக்குவது அல்ல. இந்தியன் ரயில்வே நாட்டு மக்களின் சொத்து. ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் புதுப்புது சேவைகள் வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அதனை நிறைவேற்ற அரசால் மட்டும் முடியாது. அதில், பல்வேறு பிரச்னைகள் உள்ளது. பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய ஆயிரக்கணக்கான ரயில்வேக்கள் விடவேண்டும். அதற்கு நிதி தேவைப்படுகிறது. பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வேஸுல் முதலீடு செய்ய தனியார் நிறுவனங்கள் வந்தால், அது பயணிகளுக்கு பயனாக இருக்கும்.
ரயில்வேதுறையின் உரிமையாளராக அரசே இருக்கும். உரிமம் மட்டுமே தனியாருக்கு விற்கப்படும். ரயில்வேதுறை கார்ப்பரேட் மயமாக்கப்படுகிறதே தவிர தனியார்மயமாக்கப்படவில்லை. இதனால், ரயில்வே ஊழியர்கள் பாதிப்படைய மாட்டார்கள். தனியார்மயமாக்கல் வேலைவாய்ப்பை பெருக்கும். சிறந்த வழியில் சேவைகளை அளிக்கும்" என்றார்.
இதையும் படிங்க: இலங்கையில் இடைக்கால அமைச்சரவை பதவியேற்பு.!