ஈரானிய ஆட்சியாளர்களுக்கும் ட்ரம்ப் நிர்வாகத்துக்கும் இடையிலான உறவு தொடர்ந்து விரிசலடைந்துவருவதால், சபாஹர்-ஜாகேதன் ரயில் இணைப்பு மற்றும் சபாஹர் துறைமுக திட்டத்தின் நிச்சயமற்ற தன்மை குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், அமெரிக்காவின் வழியை தெஹ்ரானிடம் பின்பற்றவில்லை என்று இந்தியா கூறியுள்ளது. தெஹ்ரான் டைம்ஸின் மூத்த பத்திரிகையாளர்களுடனான ஒரு உரையாடலில் தெஹ்ரானுக்கான இந்திய தூதர் கடாம் தர்மேந்திரா இந்தக் கருத்தை வலியுறுத்தினார்.
முன்னதாக, ஜூலை 15ஆம் தேதி நடைபெற்ற கூட்டம் தொடர்பாக வெளியான வீடியோவில், சர்வதேச தடைகளுக்கு மத்தியில் ஈரானிய நாணயத்தில் வர்த்தகம் செய்ய உதவும் ஒரே நாடு இந்தியாதான் என்று தர்மேந்திரா தெரிவித்திருந்தார். தற்போது, இந்தியா பெரும்பாலும் தேயிலை, அரிசி, சில கார் உதிரிபாகங்கள், விவசாயப் பொருள்கள் ஆகியவற்றை ஈரானுக்கு ஏற்றுமதி செய்தாலும், அமெரிக்க அழுத்தத்தின் காரணமாக, அதன் எண்ணெய் இறக்குமதியைக் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளது.
ஈரான் மத்திய வங்கி (CBI), இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகியவற்றுடன் யூகோ வங்கி மற்றும் ஈரானிய தரப்பில் உள்ள ஆறு வங்கிகள் இரு நாடுகளின் நாணயங்களில் வர்த்தகத்தை மேற்கொள்ள உதவுகின்றன. முக்கியமாக, ஈரானில் என்ன செய்ய வேண்டும் என்று அமெரிக்கர்கள் கூற முடியாது என்று இந்தியா கூறியுள்ளது.
"இருதரப்பு வர்த்தகத்தை உள்ளூர் நாணயம் (ரூபாய்-ரியால்) மூலம் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரே நாடு நாம்தான். உண்மை என்னவென்றால், நாங்கள் ஈரானில் வேலை செய்கிறோம், நாங்கள் ஈரானுக்கான உபகரணங்களை வாங்குகிறோம். நாங்கள் அதற்காகத் தயாராகிவருகிறோம். எனவே, இங்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் (அமெரிக்கா) எங்களிடம் சொல்ல முடியாது என்பதைத் தெளிவாக அமெரிக்காவிடம் கூறியுள்ளோம்” என்று தூதர் தர்மேந்திரா கூறினார்.
தெஹ்ரான் டைம்ஸ் முதலில் ட்வீட் செய்து, பின்னர் நீக்கிய வீடியோவில், இரு நாடுகளுக்கிடையில் 2018ஆம் ஆண்டு டிசம்பரில் கையெழுத்திடப்பட்ட வருடாந்திர அடிப்படை ஒப்பந்தம்/ இடைக்கால ஒப்பந்தத்தின் கீழ், சபஹார் வழியாக மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“டிசம்பர் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுக்கு இடையிலான இடைக்கால ஒப்பந்தத்தின் கீழ், கடந்த ஒரு ஆண்டில் 6 ஆயிரம் டன் கன்டைனர்களும், ஒரு மில்லியன் டன் அளவிற்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்டவற்றின் வணிகமும் அதிகரித்துள்ளது. இது ஒரு ஆண்டில் ஏற்பட்ட வளர்ச்சி. இது ஒரு புதிய துறைமுகம் என்பதால் வளர்ச்சியடைய மேலும் சிறிது காலம் ஆகும்” என்று தூதர் கூறினார்.
சீனாவுடன் 25 ஆண்டுகால விரிவான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு ஈரான் தயாராகிவரும் நேரத்தில், ஈரானின் முன்னணி ஆங்கில நாளிதழுக்கு இந்திய தூதர் அளித்த நேர்காணல் வெளியானது என்று ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவேத் ஸரீஃப் கூறியுள்ளார்.
சபாஹர் துறைமுகத்திற்குத் தேவையான உபகரணங்களைப் பெற இத்தாலி, பின்லாந்து, ஜெர்மனி, சீனா ஆகிய நாடுகளுக்கு ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும், இந்த ஆண்டு அக்டோபருக்குள் ஆர்டர்களை எதிர்பார்ப்பதாகவும் தர்மேந்திரா குறிப்பிட்டுள்ளார்.