டெல்லி வடகிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13இல் இருந்து தற்போது 20ஆக உயர்ந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற போராட்டம் கடந்த இரு நாள்களாகக் கலவரமாக மாறியுள்ளது. இந்தக் கலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் காவல் துறையினரிடம் ஆலோசனை மேற்கொண்டு நிலைமையைக் கூர்ந்து கவனித்துவருகின்றனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவத்தை அழைக்க வேண்டும் என மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்துவரும் நிலையில், விரைவில் நிலைமை சீராகும் என டெல்லி காவல் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்தக் கலவரத்தில் தலைமைக் காவலர் ரத்தன் லால் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்து. தற்போது அந்த எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளதாக மூத்தக் காவல் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.