புதுச்சேரி மாநிலத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், அரசு நலத்திட்டங்களை மக்களிடம் நேரடியாக சேர்ப்பதற்காக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களை சந்தித்துவருகின்றனர். அவர்களில் யாரேனும் கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதைக் கண்டறிய சட்டப்பேரவை கமிட்டி அறையில் சிறப்பு பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டு முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு நேற்று நடைபெற்ற கரோனா நோய் குறித்த பரிசோதனையின் முடிவுகளில் யாருக்கும் நோய் அறிகுறி தென்படவில்லை எனக் கூறினார்.