நிர்பயா வழக்கு குற்றவாளிகளான வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (31), முகேஷ் குமார் சிங் (32), பவன் குப்தா (25) ஆகியோர் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்படவுள்ளார்கள். இவர்கள் அனைவரும் தனி அறை சிறை எண் மூன்றில் வைக்கப்பட்டுள்ளனர்.
தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு குற்றவாளிகளிடம் குடும்பத்தினரை சந்திக்க விருப்பம் உண்டா, விருப்பம் இருந்தால் யாரை சந்திக்க விரும்புகிறீர்கள் எனக் கேட்பது வழக்கம்.
இதேபோல், நிர்பயா குற்றவாளிகளிடம் சிறைத் துறையினர் கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் அமைதி காத்ததாக மூத்த சிறைத் துறை அலுவலர் தெரிவித்துள்ளார். உயில் எழுத விருப்பம் உண்டா என்ற கேள்விக்கும் அவர்கள் அமைதி காத்துள்ளனர்.
வாரம் இருமுறை குற்றவாளிகள் தன் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பான கடைசி சந்திப்பு இன்னும் இறுதிசெய்யப்படவில்லை.
முன்னதாக, நான்கு குற்றவாளிகளும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்படவுள்ளனர். குற்றவாளிகள் நல்ல மனநிலையில் உள்ளார்களா என்பதை அறிந்துகொள்ளும் வகையில் சிறைத் துறை அலுவலர்கள் அவர்களிடம் தினமும் உரையாடல் நிகழ்த்திவருகின்றனர்.
தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு பயிற்சியளிக்கும்வகையில் சிறைத் துறை அலுவலர்கள் குற்றவாளிகளின் எடைக்கு ஏற்றாற்போல் போலியை தயார்செய்து அதனை தூக்கிலிட்டனர்.
மேலும், தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்காக இரு அலுவலர்கள் உத்தரப் பிரதேச சிறையிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.