உலகளாவிய பெருந்தொற்று நோயாக மாறியுள்ள கரோனா வைரசின் தாக்கம் நாளுக்குநாள் இந்தியாவில் தீவிரமடைந்துவரும் நிலையில், கேரளாவின் அதன் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. கேரள அரசின், கோவிட்-19 பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில் கரோனா தடுப்பு, பாதிப்பு குறைப்பு நடவடிக்கைகளில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசாங்கம் முன்னுதாரணமாக விளங்குகிறது.
இது தொடர்பாக ஈடிவி பாரத்திற்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் அளித்த சிறப்பு நேர்காணலில், ”கோவிட்-19 க்கு எதிரான போரை கேரள மாநில அரசு மிகவும் திறமையாக முன்னெடுத்து வருகிறது. இதுபோன்ற நெருக்கடி சூழ்நிலைகளில் தேவைப்படும் தலைமைத்துவ குணங்களை தான் கொண்டிருப்பதை பினராயி விஜயன் நிரூபித்துள்ளார்.
சுகாதார அமைச்சரும், பிற துறை அமைச்சர்களும் கூடுதல் நேரம் வேலை செய்து வருகின்றனர். கோவிட்-19 தடுப்புக்கான கேரளாவின் முயற்சிகளை உலகம் முழுவதும் பாராட்டுகிறது, ஏனெனில் இதுபோன்ற நெருக்கடியை கையாள இங்கு எங்களுக்கு நல்ல தலைமை இருக்கிறது. பெண்கள், தொழிலாளர்கள், கேரள காவல்துறை, மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட பலரின் கடின உழைப்பும் இந்த போரில் மிக முக்கியமானது.