இதுகுறித்து டெல்லியில் பேசிய ஹர்தீப் சிங் பூரி, பிரதமரின் கனவுத்திட்டமாக அறியப்படும் நாடாளுமன்ற மறுசீரமைப்புத் திட்டத்திற்காக ஒரு மரம் கூட கண்டிப்பாக வெட்டப்படாது என்றார். அதுமட்டுமின்றி அப்பகுதியில் உள்ள பசுமை பகுதிகள் மேலும் 10 மடங்கு அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "இத்திட்டத்திற்கு மரங்கள் வெட்டப்படக்கூடாது என ஆரம்பம் முதலே கொள்கை கொண்டிருந்தேன். 100 வருட மரத்தை வெட்டும் பேச்சுக்கே இடமில்லை" என்று திட்டவட்டமாகக் கூறினார்.
மேலும், "இதில் ராஷ்ட்டிரபதி பவன், நார்த் ப்ளாக், சௌத் ப்ளாக் குறித்த எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆனால் அந்த கட்டடங்களின் பயன்பாடுகள் மாறலாம். சௌத் ப்ளாக் வரலாற்று அருங்காட்சியகமாக மாற்றப்படலாம். அதேபோல் தற்போதுள்ள நாடாளுமன்றத்தை மக்களவையின் ஒரு பகுதிக்கு மட்டும் பயன்படுத்திவிட்டு புதிதாக ஒரு நாடாளுமன்றம் கட்டப்படலாம். இதுகுறித்த முடிவுகளைக் குழுதான் எடுக்கும். ஆனால் நாடாளுமன்றத்தின் பாரம்பரியம் கண்டிப்பாகப் பாதுகாக்கப்படும்" என்றார்.