நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்ப உள் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
உள் துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, சில ஊடக அறிக்கைகள், ரயில்வே துறை சார்பில் நாள் ஒன்றுக்கு 400 சிறப்பு ரயில்களை இயக்கும் திட்டம் உள்ளதாகச் செய்திகள் வெளியிட்டன.
அந்தச் செய்திகளில் இது தொடர்பாக முன்னோட்டங்கள் நடந்ததாகவும், திட்டம் தற்போது தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து இது தொடர்பாக இந்திய ரயில்வே உடனடியாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “கரோனா பெருந்தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்திய ரயில்வேயின் அனைத்துப் பயணிகள் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளன.
இது மற்ற சாதாரண நேரங்களைப் போலல்லாமல், நாட்டிற்கு ஒரு அசாதாரண சூழ்நிலை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆகவே இது போன்ற வதந்திகளிடம் கவனமாக இருங்கள்.