இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் தற்போது மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி மத்திய மாநில அலுவலகங்களும் தனியார் அலுவலகங்களும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்கலாம் என்றும் இருப்பினும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை தங்கள் ஸ்மார்ட்போனில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தது.
ஆரோக்கிய சேது செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். இருப்பினும் ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானது என்று மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹேக்கரும் சைபர் பாதுகாப்பு வல்லுநருமான எலியட் ஆல்டர்சன், ஆரோக்கிய சேது செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும் இதன் மூலம் 9 கோடி இந்தியர்களின் தரவுகள் பாதுகாப்பின்றி இருப்பதாகவும் கூறியிருந்தார்.
அவரது குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ள மத்திய அரசு ஆரோக்கிய சேது பாதுகாப்பானது என்று கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பயனாளர்களின் இருப்பிடம் குறித்த தகவல்களை சில சமயங்களில் ஆரோக்கிய சேது செயலி பெறும், ஆனால் இது குறித்து பயனாளர்களுக்கு privacy policyஇல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளர்களிடமிருந்து பெறும் தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு வல்லுநருக்கு நன்றி தெரிவித்துள்ள அந்த அறிக்கை மற்றவர்களையும் இந்த செயலியில் உள்ள பாதுகாப்பு குறைகளைக் கண்டறிய அழைப்பு விடுத்திருந்தது.
இந்த அறிக்கைக்கு பிரான்ஸ் சைபர் பாதுகாப்பு வல்லுநர் எலியட் ஆல்டர்சன், "நாளை மீண்டும் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்" என்று பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: ஊரடங்கால் அதிகரித்த ட்ரிம்மர் விற்பனை!