டெல்லி:புதிய தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020 தொடர்பாக மத்திய அரசு மீது குற்றம் சுமத்தியுள்ள காங்கிரஸ், புதிய தேசிய கல்விக் கொள்கை மனித வளர்ச்சி மற்றும் அறிவின் விரிவாக்கத்தின் அடிப்படை இலக்கை தவறவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (ஆக.2) எம்.எம். பல்லம் ராஜு, ராஜிவ் கவுடா, ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, புதிய கல்விக் கொள்கை டிஜிட்டல் பிளவுகளை உருவாக்கும், இதனால் நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், அவர்களுக்கு கல்வி எட்டாமல் போகும்” என்று தெரிவித்தனர்.
இது குறித்து முன்னாள் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பல்லம் ராஜு கூறுகையில், “இந்தக் கொள்கை எந்தவொரு ஆலோசனையுமின்றி அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
அதைச் செயல்படுத்த எந்தத் திட்டமும் இல்லை. இது நாட்டில் டிஜிட்டல் இடைவெளியை உருவாக்கும். மொத்த சேர்க்கை விகிதத்தை 26 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த ஆன்லைன் கல்வி மற்றும் தொலைதூரக் கல்வி ஆகியவற்றில் என்இபி 2020 முக்கிய கவனம் செலுத்துகிறது. டிஜிட்டல் உள்கட்டமைப்பு இல்லாத நிலையில் இது ஏழைகளையும் பின்தங்கியவர்களையும் பிரிக்க வழிவகுக்கும்” என்றார்.
மேலும், கல்விக்கான செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவீதமாக உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தையும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. “இது 2014 ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.14 சதவீதத்திலிருந்து தற்போது மோடி அரசாங்கத்தின் கீழ் 3.2 சதவீதமாக குறைந்துள்ளது. இந்நிலையில் கோவிட்-19ஐ காரணம் காட்டி செலவினத்தை குறைத்தால், கல்வி பயில்வோர் எண்ணிக்கை மேலும் வீழ்ச்சியடையக்கூடும்” என்றும் பல்லம் ராஜு எச்சரித்தார்.
ராஜிவ் கவுடா கூறுகையில், “பள்ளி கல்வி குறித்த ஒருங்கிணைந்த மாவட்ட தகவல்களின் தரவுகளின்படி, 9.85% அரசு பள்ளிகளில் மட்டுமே செயல்பாட்டு கணினி உள்ளது. அதில், 4.09% பள்ளிகளில் இணைய இணைப்பு உள்ளது. இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கை ஆன்லைன் கல்வியின் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பது மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்துகிறது” என்றார்.