இந்தியா-சீனா ஆகிய நாடுகளுக்கிடையே எல்லையில் தற்போது பதற்றம் நிலவுகிறது. இரு நாட்டு பாதுகாப்புப் படையினரும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்னையை சுமுகமாக முடிக்கச் சீனாவுடன் நேரடியாக தொடர்புகொண்டு பேசிவருவதாக இந்திய வெளியுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னையில் தான் மத்தியஸ்தம் செய்ய தயாராகவுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், சமீபத்தில் இது குறித்துத் தான் பிரதமர் மோடியுடன் பேசியதாகவும், அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இரு நாடுகளுக்கிடையே எல்லையில் ஏற்பட்ட பிரச்னையை சுமுகமாகப் பேசி தீர்க்கவுள்ளதாக இந்தியா கூறியிருந்த நிலையில், ட்ரம்பின் இந்தப் பேச்சு சர்ச்சையானது.
ஆனால் ட்ரம்ப் குறிப்பிட்டதைப் போல எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று அரசு தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அரசு உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில்,"ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தொடர்பாக ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெற்ற உரையாடலே பிரதமர் மோடிக்கும் ட்ரம்புக்கும் இடையேயான கடைசி உரையாடல்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிபர் பொய் சொல்கிறார் என்று கூறுவது தவறு - ட்விட்டருக்கு எதிராகக் களமிறங்கும் ஃபேஸ்புக்