புதுச்சேரி கோரிமேடு அடுத்துள்ள தமிழ்நாடு பகுதியான திண்டிவனம் பகுதிகளில் இரு மாநில அலுவலர்கள், காவல் துறையினர் எல்லையில் சீல்வைத்துள்ளனர். எல்லைப் பகுதியில் இருப்பவர்கள் யாரும் புதுச்சேரி மாநிலத்துக்குள் வராமல் இருப்பதற்காக இருமாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்துள்ளன.
மேலும் புதுச்சேரி எல்லைப்பகுதியான கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதியில் இருமாநில காவல் துறையினர் ஒன்றிணைந்து யாரும் உள்ளே வராமல் தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி காவல் துறையினர் தங்களது எல்லைப்பகுதி முழுவதும் தடுப்புகளைப் போட்டுள்ளனர். இதனால் இருமாநில எல்லைப் பகுதிகளிலும் இருசக்கர வாகனம் உள்பட யாரும் செல்லாமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே மருத்துவச் சிகிச்சை, இருமாநில அரசு ஊழியர்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலத்திற்குச் செல்வதையும் மாநில எல்லைகளில் அனுமதிக்கப்படவில்லை என்ற புகார்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததை அடுத்து இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் ஆகியோர் ஒன்றிணைந்து அலுவலர்களுடன் கோரிமேடு எல்லைப் பகுதியில் ஆய்வுமேற்கொண்டனர்.