தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் - ஈடிவி பாரத் பேட்டியில் ஹரிஸ் ராவத் - உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹரிஸ் ராவத்

"பிரதமர் மோடி, பாஜக அரசின் பாணியை விமர்சித்து ராகுல் தக்க பதிலடி அளித்துவருகிறார். காங்கிரஸ் தலைவராக அவர் வளர்ந்துள்ளார். எதிர்க்கட்சி தலைவருக்கான வெற்றிடத்தை அவர் நிரப்பியுள்ளார். இச்சூழலில், காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இளம் தலைவர் தேவை. நாடு முழவதும் பயணித்து அவர் மக்களை சந்தித்துவருகிறார். அவருக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. காலம் மாறிவருகிறது. வாழ்வாதாரம் குறித்த பிரச்னைகளை மக்கள் எழுப்பிவருகின்றனர். இக்காலகட்டத்தில், ராகுல் மீண்டும் தலைவராக பொறுப்பேற்க வேண்டும்" என ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹரிஸ் ராவத் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹரிஸ் ராவத்
உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹரிஸ் ராவத்

By

Published : Aug 30, 2020, 5:23 PM IST

கேள்வி: காங்கிரஸ் தலைமையில் மாற்றத்தை கோரி 23 மூத்த தலைவர்கள் எழுதிய கடிதத்தால் தலைமை பிரச்னை வெளி உலகுக்கு வந்துள்ளது. சீனியர்ஸ், ஜூனியர்ஸ் இடையே உள்ள கருத்து வேறுபாடு காங்கிரஸ் வளர்ச்சிக்கு தடையாக உள்ளதா?

பதில்: வரலாற்றில், இளம் தலைவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு ஆதரவாகவே காங்கிரஸ் இருந்துள்ளது. இந்திரா காந்தி காலத்தில், பல இளைஞர்கள் கட்சியில் இணைந்தார்கள். கமல் நாத் போன்றவர்களை சஞ்சய் காந்தி கட்சிக்கு அழைத்துவந்தார். ராஜிவ் காந்தி தலைமை பொறுப்புக்கு வந்தபோது, நான் உள்பட, குலாம் நபி ஆசாத், அகமது படேல், அனந்த் சர்மா, முகுல் வாஸ்னிக் உள்ளிட்டவர்கள் கட்சியில் இணைந்தோம். சஞ்சய் காந்தி, ராஜிவ் காந்தி காலத்தில் கட்சியில் இணைந்தவர்கள் தற்போது கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள். எங்களுக்கு பிறகு, கட்சியில் அவினாஷ் பாண்டே உள்ளிட்ட இளைஞர்கள் கட்சியில் இணைந்து சிறப்பாக செயல்பட்டுவருகிறார்கள்.

அதேபோல், ராகுல் காந்தி அரசியலில் இணைந்த பிறகு, ராஜீவ் சாதவ், கவுரவ் கோகோய் ஆகிய இளைஞர்கள் இணைந்து கட்சியில் வளர்ந்துள்ளனர். எனவே, இளைஞர்கள் ஈர்க்கும் தன்மை காங்கிரஸ் கட்சிக்கு இயற்கையாகவே உள்ளது. கட்சியில் சீனியர்ஸ் vs ஜூனியர்ஸ் பிரச்னை இல்லை. இளைஞர்களுக்கு இடமளித்து அவர்களுக்கு ஆதரவாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம்.

ஜோதிராதித்ய சிந்தியா போன்ற விவகாரங்களும் கட்சியில் நடந்தது. குறுகிய காலத்தில் அவருக்கு கட்சி நிறைய பொறுப்புகளை வழங்கியது. தனிப்பட்ட சம்பவம் ஒன்றை விவரிக்கிறேன். 1980ஆம் ஆண்டு, சிந்தியாவின் தந்தை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது நானும் எம்பியாக இருந்தேன். பல ஆண்டுகள் கழித்து, மன்மோகன் சிங் ஆட்சியில் நான் இணையமைச்சராக இருந்தபோது, சிந்தியா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹரிஸ் ராவத்

நாங்கள் பொறுமையாக இருந்தோம். சிந்தியா கட்சியிலிருந்து விலகாமல் இருந்திருந்தால், அவர் மத்திய முதலமைச்சராக பொறுப்பேற்றிருப்பார். ஆனால், அவருக்கு பொறுமை இல்லை. எனவே, கட்சியிலிருந்து விலகினார்.

கேள்வி: அப்படி இருந்திருந்தால், கருத்து வேறுபாடு தெரிவித்தவர்களின் பிரச்னையை விவாதிக்கும் நோக்கில் கூடிய காங்கிரஸ் செயற்குழுவில் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தை ஏன் விமர்சிக்க வேண்டும்?

பதில்: கடிதம் எழுதியது பிரச்னை இல்லை. ஆனால், அது எழுதப்பட்ட காலகட்டமும் ஊடகத்தில் இதுகுறித்து கசிய விட்டதும் செயற்குழு உறுப்பினர்களை அதிருப்தி அடைய வைத்தது. இது ஏன் நடந்தது என அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்? அனைத்தும் அறிந்த மூத்த தலைவர் ஆசாத். குறிப்பாக, ஆசாத், அகமது படேல், அம்பிகா சோனி ஆகியவர்களுக்கு கட்சியில் சிறப்பான இடம் உள்ளது. நாங்கள் அவர்களை எப்போதும் மதிக்கிறோம். கூட்டத்தின்போது, அவர்கள் நின்று கொண்டிருந்தால், நாங்கள் நாற்காலி கூட உட்கார மாட்டோம். கட்சியின் சிக்கல்களை தீர்ப்பவராக ஆசாத் உள்ளார். ஏதேனும் கட்சியில் தவறாக நடந்திருந்தால் அதனை அவரே சரி செய்வார். அதேபோல்தான், அகமது படேலும். அந்த கடிதம் ஊடகத்தில் கசிந்து, அப்பிரச்னைகளுக்கு காரணம் ஆசாத் என தெரியவந்தபோது, இதனை ஏன் அவர் செய்தார் என குழப்பமாக இருந்தது.

சோனியாவை அவர் சந்தித்து பேசியிருக்கலாம். அவரின் குறைகளை சோனியா கேட்டிருப்பார். இருப்பினும், கட்சி குறித்த தவறான செய்திகள் ஊடகத்தில் வெளியானது. அது எங்களுக்கு மன வேதனையை அளித்தது. அதுதான் காங்கிரஸ் செயற்குழுவில் எதிரொலித்தது. சதி வேலையை செய்ய ஆசாத் முயற்சித்தார் என நாங்கள் கூறவில்லை. ஆனால், கடிதம் கசியவிடப்பட்டதன் முறையையே நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். இதுவே விவாதத்தை நீட்டித்தது. ஆனால், அனைவரின் பிரச்னையும் தீர்த்து வைக்கப்படும் என சோனியா உறுதி அளித்துள்ளார்.

கேள்வி: ராகுல் காந்தி மீண்டும் தலைவராக பொறுப்பேற்பதில் அவர்களுக்கு பிரச்னை உண்டா?

பதில்: தலைவராக பொறுப்பேற்க ராகுல் காந்தி மறுத்தால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒன்று கூடி பிரச்னைகளை தீர்க்கும் என காங்கிரஸ் செயற்குழு விவாதித்தது. ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்கவே நாங்கள் விரும்புகிறோம். காங்கிரஸ் செயற்குழுவின் ஒருமித்த கருத்தும் அதேதான். 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுவில், ராகுல் காந்தி ராஜினாமாவை திரும்பபெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அவரின் தலைமைத்துவத்தில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.

ராகுல் தலைவராக பொறுப்பேற்கும்போது, பல சவால்கள் இருந்தன. அது எங்களுக்கும் தெரியும். நாட்டில் நாடாளுமன்ற அமைப்பும் அரசியலமைப்பு ஜனநாயகமும் தற்போது சவால்களை சந்தித்துவருகின்றன. பிரதமர் மோடி, பாஜக அரசின் பாணியை விமர்சித்து ராகுல் தக்க பதிலடி அளித்துவருகிறார். காங்கிரஸ் தலைவராக அவர் வளர்ந்துள்ளார். எதிர்க்கட்சி தலைவருக்கான வெற்றிடத்தை அவர் நிரப்பியுள்ளார். இச்சூழலில், காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இளம் தலைவர் தேவை. நாடு முழவதும் பயணித்து அவர் மக்களை சந்தித்துவருகிறார். அவருக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. காலம் மாறிவருகிறது. வாழ்வாதாரம் குறித்த பிரச்னைகளை மக்கள் எழுப்பிவருகின்றனர். இக்காலகட்டத்தில், ராகுல் மீண்டும் தலைவராக பொறுப்பேற்க வேண்டும்.

கேள்வி: காங்கிரஸ் செயற்குழுவிற்கான தேர்தல் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இதுகுறித்த உங்கள் கருத்து என்ன?

பதில்:இதுகுறித்து பொதுவெளியில் விவாதிக்கக் கூடாது. கட்சிக்குள் விவாதிக்க வேண்டும். காங்கிரஸ் செயற்குழு கூடி, மூத்த தலைவர்களுடன் ஆலோசனை செய்து கட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். ஆசாத் ஒன்றும் புதிதாக எதனையும் சொல்லவில்லை. பழை/ காங்கிரஸ் கட்சியின் கருத்துகளையே தெரிவிக்கிறார். இளைஞர் காங்கிரஸூக்கு மறுமலர்ச்சி அளித்து, அதற்கான தேர்தல்களை நடத்தியவரே ராகுல்தான்.

ராகுல் தலைவராக பொறுப்பேற்றால், உள்கட்சி தேர்தல்களை நடத்தவே அவர் விரும்புவார். ஆனால், நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்னையை தீர்க்க நான் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உள்கட்சி தேர்தல்களை நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் உடன்படுகிறோம். அதனை எப்போது நடத்த வேண்டும் என்பதை நாங்களே முடிவு செய்வோம்.

கேள்வி:மாற்று கருத்து தெரிவித்தவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டதா?

பதில்: மாற்று கருத்து தெரிவித்து கடிதம் எழுதியவர்களின் பிரச்னைகள் குறித்து நீண்ட நேரம் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுவில் விவாதித்தோம். சோனியா இறுதியாக தெரிவித்த கருத்து அனைத்து பிரச்னைகளுக்கும் முடிவு கட்டிவிட்டது. ஆசாத் எந்தளவுக்கு கட்சியில் அக்கறை கொண்டுள்ளாரோ அதே அளவு நானும் கொண்டுள்ளேன். பிரச்னைகளை எழுப்புவதில் யாருக்கும் கேட்ட நோக்கும் இல்லை என நான் நினைக்கிறேன்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இன்னும் ஆறு மாதத்தில் கூட உள்ளது. மற்றொரு பிரச்னை உருவாவதற்குள், காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்க வேண்டும். அதுவரை, ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக இருந்து வேலைவாய்ப்பின்மை, சகிப்புத்தன்மை, பொருளாதார சீரழிவு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப வேண்டும். மோடி அரசுக்கு நெருக்கடி தர வேண்டும்.

கேள்வி: காங்கிரஸ் கட்சியால் ஏன் தீவிரமான எதிர்க்கட்சியாக செயல்படமுடியவில்லை?

பதில்: துரதிருஷ்டவசமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, எப்போதும் இல்லாத அரசியல் சூழல் நிலவிவருகிறது. அது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இல்லை. மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்தும் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் முயற்சிகள் வெற்றிஅடைந்துள்ளன. அதனை, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தல்களில் கண்டோம். சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைப்போம் என நம்பினோம். இதே, நம்பிக்கை உத்தரகாண்டில் இருந்தது.

தேர்தல் பரப்புரையில் மதவாத கருத்துகளை எழுப்பி, தேர்தலை களத்தை மதவாத அடிப்படையில் பிரித்தவர் மோடி. இதன் விளைவாக, தேர்தலில் நாங்கள் தோல்வி அடைந்தோம். அதே ஆண்டில் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வேலைவாய்ப்பின்மை, பொருளாதார மந்த நிலை குறித்த பிரச்னைகள் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின.

இந்த பிரச்னைகளை நாங்கள் எழுப்பி, வலுவாக மாறினோம். ஆனால், 2019ஆம் ஆண்டு, துரதிருஷ்டவசமாக புல்வாமா தாக்குதல் நடைபெற்றது. இதையடுத்து, இந்திய விமானப்படை நடத்திய பாலகோட் தாக்குதலை பிரதமர் மோடி தனக்கு ஆதரவாக மாற்றிக்கொண்டார்.

இதில், ஊடகம் பெரிய பங்கு வகித்தது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படுகிறது என்ற பொய்யான பிம்பம் கட்டமைக்கப்பட்டது. இது துரதிருஷ்டவசமானது. இந்திய கலாசாரத்தின் அடிநாதமே அனைத்து மதத்தையும் சமமாக பார்ப்பது. ஆனால், மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்துவதில் பாஜக வெற்றி கண்டது. இதுவரை பார்க்காத யுக்தியை நாங்கள் எதிர்கொண்டோம். இதன் காரணமாக, 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தோம்.

கேள்வி: கடந்த பத்தாண்டுகளில், காங்கிரஸ் தலைவர்களின் செயல்பாடுகள் மாற்றம் அடைந்துள்ளவா?

பதில்: இந்திரா காந்தி காலத்திலிருந்தே, காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் ஒரே மாறி இருந்துள்ளன. ராஜிவ் காந்தி, பி.வி. நரசிம்ம ராவ், சீதாராம் கேசரி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தலைவராக இருந்தபோது கூட மாற்றம் நிகழவில்லை. 12ஆண்டு காலமாக, சோனியா காந்தி தலைமையின் கீழ் ராகுல் பல பொறுப்புகளை வகித்துவந்தார். இன்றைய காலகட்டத்தில், எங்களின் பணி கலாசாரத்தில், உள்கட்சி செயல்பாடுகளில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், நாட்டின் அரசியல் சூழல் பெரிய அளவில் மாறியுள்ளது. மாசு நிறைந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு உகந்ததாக அது இல்லை.

கேள்வி: மாற்றம் நிகழும் என நம்பிக்கை உண்டா?

பதில்: வாழ்வாதாரம், வேலைவாய்ப்பின்மை, பொருளாதார மந்த நிலை குறித்த பிரச்னைகளுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்கும்போது, மாற்றம் நிகழும். காங்கிரஸ் கட்சியின் பணிகளை அவர்கள் மீண்டும் போற்ற தொடங்குவர். நாட்டில் பிளவு ஏற்பட்டதற்கு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பிரதமர் மோடி ஆகியோரே காரணம். காங்கிரஸ் அதற்கு நல்ல தீர்வை காணும். சொந்த கொள்கைகளின் அடிப்படையில் காங்கிரஸ் போராடும். அப்போது, யாராலும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த முடியாது.

இதையும் படிங்க: எழுச்சியை உருவாக்கும் புதிய தலைவர் காங்கிரசுக்கு தேவை - சஞ்சய் ஜா

ABOUT THE AUTHOR

...view details