மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
குறிப்பாக, தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் டெல்லி சலோ என்ற முழக்கத்தை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொட்டும் பனியிலும், கடும் குளிரையும் பாராமல் 14 ஆவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது.
விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு ஐந்து சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டுக் குழு வருகின்ற 9ஆம் தேதி மாலை 5 மணி அளவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்துப் பேசவிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் பொலிட்பீரோ உறுப்பினருமான சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக எதிர்க்கட்சிகளின் கூட்டுக் குழுவைச் சேர்ந்த ஐந்து தலைவர்களுக்கு மட்டுமே ராஷ்டிரபதி பவன் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.