இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் உள்நாட்டு விமான சேவை சில குறிப்பிட்ட வழித்தடங்களில் தொடங்கப்படும் என்று அறிவித்த ஏர் இந்தியா அதற்கான முன்பதிவுகளையும் தொடங்கின.
இதற்கிடையே மத்திய அரசு விமான சேவை குறித்து அறிவித்தவுடன் முன்பதிவுகளைத் தொடங்க வேண்டும் என்று விமானத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். இது குறித்து ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டர் பக்கத்தில், "இதுவரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளைத் தொடங்குவது குறித்து அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இது குறித்து மத்திய அரசு முறையான அறிவிப்பை வெளியிட்ட பின் விமான நிறுவனங்கள் முன்பதிவுகளைத் தொடங்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஏர் இந்திய நிறுவனம் மே 4ஆம் தேதி முதல் குறிப்பிட்ட வழித்தடங்களில் உள்நாட்டு விமான சேவையும் ஜூன் 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட வழித்தடங்களில் வெளிநாட்டு விமான சேவையும் தொடங்கப்படும் என்று அறிவித்து அதற்கான முன்பதிவையும் தொடங்கியிருந்தது. அதேபோல இண்டிகோ நிறுவனமும் மே 4ஆம் தேதி முதல் விமான சேவை படிப்படியாகத் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தது.
விமான நிறுவனங்களின் அறிவிப்பும் அரசின் அறிவிப்பும் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதால் பொதுமக்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதையும் படிங்க: 29 விழுக்காடு கோவிட் தொற்று சமய மாநாட்டுடன் தொடர்புடையது