கேரளாவில் 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கட்சியின் மூத்த தலைவர் பினராயி விஜயன் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், பினராயி விஜயன் தலைமையிலான அரசு இறுதி ஆண்டுக்குள் நேற்று (மே 25) அடியெடுத்து வைத்தது.
கடந்த நான்கு ஆண்டுகளில் பினராயி அரசு, ஒக்கி புயல் (2017), 17 பேரைக் காவு வாங்கிய நிபா வைரஸ் (2018), இரண்டு பெரு வெள்ளங்கள் (2018, 2019), மற்றும் இந்தாண்டின் கோவிட்-19 பெருந்தொற்று என அடுத்தடுத்து நான்கு பேரிடர்களை திறம்படக் கையாண்டுள்ளது.
இடதுசாரி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், " 'வாழ்க்கை திட்டம்' மூலம் இரண்டு லட்சத்து 19 ஆயிரத்து 154 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளோம். 14 ஆயிரம் பள்ளிகள் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளன. 40 ஆயிரம் வகுப்பறைகள் ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட கெயில் குழாய் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை அரசு நிறைவேற்றியுள்ளது. கேரள மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை பல சவால்களைக் கடந்து நிறைவேற்றியுள்ளோம். ஆனால், இதுபோன்ற பேரிடர்கள் நம்மை தாக்கும் போது அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
ஆர்த்தம் திட்டம் மூலம் மாநிலத்தின் சுகாதார நிலையங்களில் அதிநவீன கருவிகள் நிறுவப்பட்டன. இது, நிபா வைரஸை எதிர்கொள்ள உதவியது. இதையடுத்து, தீநுண்மியல் ஆய்வு நிறுவனத்தை நிறுவினோம். இது கோவிட்-19 பெருந்தொற்றின் போது எங்களுக்கு நம்பிக்கை அளித்தது.
ஆனால், இதைச் செய்வதற்கு அதிக நிதி தேவைப்பட்டது. இதற்கு மத்திய அரசு பெரியளவில் உதவவில்லை" எனக் கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்றை கேரளா எதிர்கொண்டு வருவதால் , பினராயி அரசு ஐந்தாம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்தது தொடர்பாக எந்த கொண்டாட்டமும் நடக்கப்படாது என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வாரங்கல் கொலை: காதலித்த பெண்ணின் மகள் மீது மோகம்! கொலைக்கான காரணம் வெளியீடு