உத்தர பிரதேசம் மாநிலம் மெயின்பூரி மாவட்டத்தில் வசித்து வருபவர் தேவி. இவரின் கணவன், மகன் ஆகியோர் ஜெய்ப்பூரில் டெய்லராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், படிக்கட்டுகளில் ஏறும் போது தவறி கீழே விழுந்த தேவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தேவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக உறவினர்கள் ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர்.
ஆனால், ஆம்புலன்ஸ் வராததால் தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே தேவி உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவித்தனர். இதையறிந்த தேவியின் கணவரும், மகனும் மெயின்பூரிக்கு புறப்பட்டனர். ஆனால், அவர்களை ராஜஸ்தானில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் தீவிர விசாரணை நடத்தி உறுதிபடுத்திய பிறகு விடுவித்துள்ளனர்.
இதுகுறித்து மெயின்பூரி மாவட்ட நீதிபதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆம்புலன்ஸ் வருவதில் கால தாமதம் ஆகியுள்ளது. ஆனால், அவர் எப்படி உயிரிழந்தார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்த பிறகுதான் உண்மை தெரியவரும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.