முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 29ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், நினைவு தினம் குறித்த விளம்பரங்கள் வெளியிடப்படாது, அதற்கு செலவாகும் பணத்தை கொண்டு வெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்யப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
விளம்பரச் செலவுகளை புலம்பெயர்ந்தோருக்கு பயன்படுத்தும் காங்கிரஸ்! - காங்கிரஸ்
டெல்லி: ராஜீவ் காந்தி நினைவு தினம் குறித்த விளம்பரங்களுக்கு செலவாகும் பணம், வெளி மாநில தொழிலாளர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ராஜீவ் காந்தியின் நினைவு தின விளம்பரங்களுக்காக செலவிடப்படவிருந்த பணம், வெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்வதற்காக பயன்படுத்தப்படும். ஏழைகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் ராஜீவ் காந்தி. அவரின் கருத்தியலுக்கு ஏற்றார்போல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வதில் காங்கிரஸ் தொண்டர்கள் உறுதியாக உள்ளனர். அந்த நோக்கத்திற்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.