பிகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி மொத்தம் 243 தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய நாட்களில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு தேர்தல்களில் பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி பரிஷத் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராக ஜனசக்தி பரிஷத் கட்சி போட்டியிட முடிவெடுத்துள்ளது. இருப்பினும் பாஜக போட்டியிட உள்ள தொகுதிகளில் தனது வேட்பாளர்களை களமிறக்கப் போவதில்லை என அக்கட்சி அறிவித்தது.
இந்நிலையில், லோக் ஜனசக்தி பரிஷத் கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தும்ராவுனில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், லோக் ஜனசக்தி பரிஷத் கட்சி ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமாரை சிறையில் அடைப்போம் என தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "மதுபானத்திற்கு தடைவிதிக்கப்பட்டது முழுவதுமாக தோல்வியடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வருகிறது. இதனால் நிதிஷ்குமாருக்கு சட்டவிரோதமாக பணம் கிடைக்கிறது. பிகார் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் லோக் ஜனசக்தி பரிஷத் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். மற்ற இடங்களில் பாஜகவுக்கு வாக்களியுங்கள். நிதிஷ்குமார் இல்லாத ஆட்சியை உருவாக்குவோம்" என்றார்.