பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவரும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான ராம்விலாஸ் பாஸ்வான் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
அவரது இறுதிச் சடங்கு இன்று (அக்.10) நடைபெற்ற நிலையில், அவரது மகன் சிராக் பாஸ்வான், பிகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரை கடுமையாக விமர்சித்து கடிதம் ஒன்றை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, ”2019ஆம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலின் போது நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டில், லோக் ஜன சக்தி கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போது அமித் ஷா உடனிருந்தார். ஆனால் மாநிலங்களவைத் தேர்தல் வந்தபோது, எங்கள் கட்சி உறுப்பினரை வேண்டுமென்றே ஆதரிக்காமல் எனது தந்தையை நிதீஷ் அவமதித்தார்.
மேலும், எனது தந்தையின் உடல் நலம் குறித்து நிதீஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என அவர் கூறினார். கடும் பணிகள் இருந்தபோதும் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கோவிட்-19 பாதிப்புக்குள்ளான அமித் ஷா ஆகியோர் எனது தந்தையின் உடல்நலன் குறித்து தொடர்ச்சியாக கேட்டறிந்தனர். ஆனால், நான் தொடர்புகொள்ள முயன்றபோதும் நிதீஷ் குமார் என்னிடம் பேசாமல் அவமதித்து வந்தார்” என பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார் சிராக் பாஸ்வான்.
இம்மாத இறுதியில் தொடங்கும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில், மத்திய பாஜக கூட்டணியில் உள்ள நிதீஷ் குமார் கட்சியும், சிராக் பாஸ்வான் கட்சியும் ஒரே கூட்டணியில் இருந்தாலும் எதிர்த்துப் போட்டியிட உள்ளன. பாஜக போட்டியிடும் தொகுதிகளை தவிர்த்து நிதீஷ் குமார் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்கவுள்ளார் சிராக் பாஸ்வான்.
இதையும் படிங்க:பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுக்கப்பட்டுள்ளது - இந்திய ராணுவம்