நித்யானந்தாவின் செயலாளராக வேலை பார்த்து வந்த பெங்களூரூவைச் சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா, தனது மூன்று குழந்தைகளையும் அவரது ஆசிரமத்தில் படிக்க வைத்து வந்துள்ளார். இந்நிலையில், வெளிநாடு தப்பிச் சென்ற நித்யானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள மாணவ, மாணவிகள் கடும் சித்ரவதை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.
தனது குழந்தைகளைக் காண சென்ற ஜனார்த்தன ஷர்மாவை, அகமதாபாத் ஆசிரத்திலிருந்து சந்திக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர்.
இதனையடுத்து, தனது மூன்று குழந்தைகளையும் அகமதாபாத் தியானப்பீட ஆசிரமத்தில் இருந்து, மீட்டுத் தரச் சொல்லி ஜனர்த்தன ஷர்மா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், இது தொடர்பாக குஜராத் மகளிர் குழந்தைகள் நல ஆணையத்திலும் புகார் தெரிவித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், கடந்த ஆண்டு குழந்தைகளை பெற்றோரின் அனுமதியின்றி அடைத்துவைத்த குற்றச்சாட்டில் நித்யானந்தா மீது விவேகானந்தா நகர் காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணையில், நித்யானந்தாவுக்கு உதவியாக குஜராத்தைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் பெண் அதிபர் மஞ்சுளா பூஜா ஷெராஃப் இருந்தது, போன்ற பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
குஜராத் குழந்தைகள் நல ஆணையமும், காவல் துறையினரும் இணைந்து நடத்திய விசாரணையில் குருகுலத்தில் உள்ள குழந்தைகளுக்கும் சிறார்களுக்கும் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களைக் காட்டி, நித்யானந்தா பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை புரிந்ததாக உண்மை வெளியானது.