2020- 2021 நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் பெரு நகரங்களுக்குச் சென்று அங்குள்ள வர்த்தகர்கள், தொழில் துறையினர், சிறு வணிகர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பட்ஜெட் தொடர்பாக விளக்கமளித்தும், அவர்களின் சந்தேகங்களையும், பிரச்னைகளையும் கேட்டறிந்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று சிறு வணிகர்கள் மற்றும் தொழில் துறையினரை சந்தித்து நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளதாகவும், அந்நிய முதலீடுகளும், அந்நியச் செலாவணியும் அதிகளவில் உள்ளது என்றும் தெரிவித்தார்.
சிறு, குறு நிறுவனங்கள் கடன் வசதி பெறுவதில் கடும் சவால்களை சந்தித்து வரும் நிலையில், இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துப் பேசிய நிர்மலா, வங்கிகள் காரணமில்லாமல் சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் கொடுக்க மறுத்தால், வணிகர்கள் அரசிடம் மின்னஞ்சல் வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என்றும் இதற்காக சிறப்புக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறினார்.
மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரை நிதித்துறை சார்பிலும், வங்கிகள் சார்பிலும் நேரடியாகச் சந்தித்து, அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.