உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் (19) ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு உயர்வகுப்பு ஆண்களால் கடந்த 14ஆம் தேதியன்று கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்.
முதுகெலும்பு உடைந்து, நாக்கு வெட்டப்பட்டு பலத்த காயங்களோடு ஆள் ஆரமற்ற இடத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த அந்தப் பெண்ணை அப்பகுதியிலுள்ள சிலர் மீட்டனர். பின்னர், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.
கடந்த 15 நாள்களாக உயிருக்குப் போராடிவந்த அவர், சிகிச்சைப் பலனின்றி நேற்று(செப்.30) உயிரிழந்தார். அவருக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உயிரிழந்த பெண்ணின் உடலை நள்ளிரவிலேயே காவல் துறையினர் எரியூட்டினர்.
உத்தரப் பிரதேச அரசின் இந்த அராஜகப் போக்கைக் கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், முன்னணி சமூக செயல்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அதேபோல, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆதரவாக வழக்காட நிர்பயா வழக்கை நடத்திய பெண் வழக்குரைஞர் சீமா குஷ்வாஹா முன்வந்துள்ளார்.
ஹத்ராஸில் உள்ள இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க இன்று அங்குவந்தடைந்த அவரை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குரைஞர் சீமா குஷ்வாஹா கூறுகையில்," உயிரிழந்த இளம்பெண்ணுக்கு நீதிக்கிடைக்க வேண்டும். வஞ்சிக்கப்பட்டுவரும் அவரது குடும்பத்தினரிடம் நான் பேசியபோது, அவர்களது சட்ட ஆலோசகராக நான் இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்கள் தான் என்னை ஹத்ராஸூக்கு வரச் சொன்னார்கள்.
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று நிர்வாகம் காரணம் கூறி, என்னை தடுத்த காவல்துறையினர் அவர்களை சந்திக்க அனுமதி அளிக்க மறுத்துள்ளனர். நான் இங்கே தனியாக வந்துள்ளேன், நான் சட்டம் ஒழுங்கு பிரச்னையை எப்படி ஏற்படுத்த முடியும் என்று மாவட்ட நிர்வாகம் கருதுகிறதென தெரியவில்லை.
எந்தச் அச்சுறுத்தலுக்கும் நான் அடிபணியப் போவதில்லை. சட்டப்படி அவர்களை சந்திக்க வழக்குரைஞராக எனக்கு 100% உரிமை உண்டு. பாதிக்கப்பட்டுள்ள அந்த குடும்பத்தினரை சந்திக்காமல் இங்கிருந்து நான் திரும்பி செல்ல மாட்டேன்" எனத் தெரிவித்தார்.
ஹத்ராஸில் 144 தடை உத்தரவு பிறப்பபிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிராஸ் கட்சி எம்.பி., உள்ளிட்டவர்களையும் உத்தரப்பிரதேச காவல்துறையினர் அராஜகமான வகையில் தடுத்துள்ளனர்.
முன்னதாக, ஹத்ராஸ் இளம்பெண் கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என காவல்துறை கூடுதல் தலைவர் (சட்டம் ஒழுங்கு) பிரசாந்த் குமார் கூறியிருப்பதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.