நீதித்துறை அகராதியில் பிடியாணை (கைது வாரண்ட்), ஆஜர்படுத்துதல், பிணை (ஜாமின்) ஆகியவை குறித்து வழக்கமாக அறிந்திருப்போம். ஆனால், நாம் எளிதில் கேள்விப்படாதது கறுப்பு உத்தரவு. இது மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் ஒரு வகை சிறப்பு அறிவிப்பாகும் (நோட்டீஸ்).
இதில் மரண தண்டனை கைதிகளை சட்டத்துக்கு உட்பட்டு தூக்கிலிடுதல், மரண தண்டனை நிறைவேற்றப்படும் நேரம் மற்றும் இடம் ஆகிய தகவல்கள் அடங்கியிருக்கும். இந்த உத்தரவு குற்றவாளிகளின் கைகளிலும் கொடுக்கப்படும்.
நிர்பயா படுகொலை வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கும் நாளை (மார்ச்20) அதிகாலை தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரே வழக்கில் நால்வருக்கு தொடர்ச்சியாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது இந்தியாவில் இது முதல்முறை.
நாளை நால்வருக்கு தூக்கு: அது என்ன கறுப்பு உத்தரவு? டெல்லியில் ஓடும் பேருந்தில் 2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற மருத்துவ மாணவி ஆறு பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் சிறார் என்பதால், அரசு கூர்நோக்கு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
மற்றொருவர் சிறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்ற நால்வரான அக்ஷய், பவன், வினய் மற்றும் முகேஷ் ஆகியோருக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் கறுப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி நால்வரும் திகார் சிறையில் நாளை (வெள்ளிக்கிழமை) தூக்கிலிடப்பட உள்ளனர்.
இதையும் படிங்க: நிர்பயா கொலை கைதி அக்ஷய் மனைவி, விவாகரத்து மனுதாக்கல்