டெல்லியில் 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. குற்றவாளிகளில் ஒருவர் 18 வயதை பூர்த்தியடையாதவர் என்பதால் அவர் மூன்றாண்டுகள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.
மீதமுள்ள ஐந்து பேரில் ஒருவர் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டார். தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக முகேஷ் (30), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோர் மேல்முறையீடு மனுக்களைத் தாக்கல்செய்தார்கள்.
அந்த மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.