தமிழ்நாடு

tamil nadu

நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்குத் தூக்கு உறுதி!

டெல்லி: நிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கு பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

By

Published : Jan 29, 2020, 11:19 AM IST

Published : Jan 29, 2020, 11:19 AM IST

Nirbhaya case
Nirbhaya case

2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்துகொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் நான்கு பேருக்கும் 2020 பிப்ரவரி 1ஆம் தேதி தண்டனையை நிறைவேற்றிவிட வேண்டும் என டெல்லி அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. குற்றவாளிகள் தரப்பிலிருந்து இதுவரை தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் ஆகிய அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.

குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தனது கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பிவிட்டு, தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றத்தில் கோரிக்கைவைத்தார். ஆனால் குடியரசுத் தலைவர் உடனடியாகக் கருணை மனுவை நிராகரித்தார். இதையடுத்து அவரது மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் தன் கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக முகேஷ் சிங் கடந்த சனிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு அவரது வழக்கறிஞர், தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கைவைத்தார். இதையடுத்து வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டு, நேற்று விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.

அதில், கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததில் குறைபாடுகள் இருந்ததாக, முகேஷ் சிங்கின் வழக்கறிஞர் வாதிட்டார். அதன்பின்னர் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, குற்றவாளிகள் செய்த குற்றங்கள் மன்னிக்க முடியாதவை என்றும் அவர்களுக்குக் கருணை காட்டக்கூடாது என்றும் தெரிவித்தார். கருணை மனு பரிசீலனைக்காக, வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அரசு வழக்கறிஞர் கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், முகேஷ் சிங்கின் மனு மீதான தீர்ப்பை இன்று ஜனவரி 29ஆம் வழங்குவதாக உத்தரவிட்டார்.

இந்நிலையில், கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தூக்கு தண்டனைக்கு எதிரான முகேஷ் சிங்கின் சட்ட வாய்ப்புகள் அனைத்தும் நிறைவுபெற்றுவிட்டதையடுத்து, அவருக்கு தூக்கு தண்டனை உறுதியானது. முகேஷ் சிங் உள்ளிட்ட நான்கு பேருக்கும் பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியானது.

இதையும் படிங்க: 33 இஸ்லாமியர்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு பிணை

ABOUT THE AUTHOR

...view details