வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடிக்கு ஜாமீன் மறுப்பு! - nirav modi
2019-04-26 15:06:03
லண்டன்: வங்கி கடன் மோசடி வழக்கில் சிறையில் உள்ள நிரவ் மோடி தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை மூன்றாவது முறையாக லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சுமார் 13ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார் வைர வியாபாரி நிரவ் மோடி. இதையடுத்து, இங்கிலாந்தில் நிரவ் மோடி சுதந்திரமாக சுற்றி வருவதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் வீடியோ வெளியிட்டது.
இதனையடுத்து, நிரவ் மோடியை நாடு கடத்தும்படி இங்கிலாந்திற்கு இந்தியா கோரிக்கை வைத்தது. இதனை ஏற்றுக் கொண்ட இங்கிலாந்து நீதிமன்றம் நிரவ் மோடிக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்து, மார்ச் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதில் நிரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. பின்னர் மார்ச் 29ஆம் தேதி விசாரணைக்கு வந்த போதும் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை லண்டன் மினிஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நிரவ் மோடி ஆஜரானார். அப்போது, நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை மூன்றாவது முறையாக மீண்டும் தள்ளுபடி செய்தது. மேலும், மே 24ஆம் தேதி வரை காவலை நீட்டித்தும் லண்டன் மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டது.