கடந்தாண்டு (2019) பிப்ரவரி 14ஆம் தேதியன்று பயங்கரவாதிகளின் மனித வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில், மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.
புல்வாமா தாக்குதல் தொடர்பாக, கடந்த ஜூலை மாதம் ஏழாவது குற்றவாளியாக பிலால் அகமது குச்சேவை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது. ஜூலை 5அன்று இவர் 'பயங்கரவாதிகளின் கூட்டாளி' எனவும் அறிவித்தது.
தேசிய புலனாய்வு முகமையின் கூற்றுப்படி, பிலால் ஜம்மு காஷ்மீரின் ஹஜிபால் பகுதியில் ஆலை ஒன்றை நடத்தி, அதில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்தது தெரியவருகிறது.
இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகள் பிலாலின் வீட்டில் தங்கியிருந்தனர். மேலும் அவர்களைத் தனது ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளார். இதுமட்டுமின்றி, அவர்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்கும் சதிச்செயலை அரங்கேற்றத் திட்டம் தீட்டுவதற்கும் வீடு ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள இயக்கத்தலைவர்களுடன் தொடர்புகொண்டு தீட்டிய திட்டத்தை அரங்கேற்றுவதற்கு வசதியாக ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுக்கு பிலால் உயர் ரக மொபைல் போனை வாங்கிக்கொடுத்துள்ளார்.
மேலும், அவர் வாங்கிக் கொடுத்த ஒரு மொபைல் போனில், அடில் அகமது தார் காணொலி ஒன்றை எடுத்தார். அந்தக் காணொலி புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு வைரலானது. இந்நிலையில் 2019 புல்வாமா தாக்குதல் தொடர்பாக ஜம்முவில் உள்ள என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) நீதிமன்றத்தில், தேசிய புலனாய்வு முகமை இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்கிறது.
இதையும் படிங்க: புல்வாமா தாக்குதல்: தொடரும் தேசிய புலனாய்வு முகமையின் நடவடிக்கை