கடந்தாண்டு, பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், மத்திய ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த 40 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தற்கொலை பயங்கரவாதியாக செயல்பட்டவர் அதில் அகமது தார். இவருக்கு வீடு வழங்கி உதவிய ஷகிர் பாசீர் மாக்ரே தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய முக்கியப் பயங்கரவாதி கைது! - புல்வாமா தாக்குதல்
22:27 February 28
டெல்லி: புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி ஒருவரை தேசிய புலனாய்வு முகமையைச் சேர்ந்த அலுவலர்கள் கைதுசெய்தனர்.
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த உமர் ஃபருக்தான் மாக்ரேவை தாருக்கு அறிமுகம் செய்துவைத்துள்ளார். ஆயுதங்கள், பணம், வெடிகுண்டு ஆகியவற்றை வாங்கிக் கொண்டு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுக்கு வழங்கியதாக மாக்ரே விசாரணையில் தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு தாக்குதல் நடைபெறும்வரை தார், உமர் ஃபருக் ஆகியோர் தன் வீட்டில் தங்கியதாகவும் மாக்ரே ஒப்புக் கொண்டுள்ளார்.
உமர் ஃபருக் அளித்த உத்தரவின்பேரில் மத்திய ஆயுத காவல் படையின் வாகனங்களை தொடர்ந்து கண்காணித்து வந்ததாகவும் அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனிடையே, தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றத்தில் மாக்ரே முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை 15 நாள்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான முக்கிய பயங்கரவாதி முடசீர் அகமது உயிரிழந்தார். இதேபோல், மார்ச் 29ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் உமர் ஃபருக் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய யூசப்புக்கு பிணை வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்.!