நாடு முழுவதும் தீபாவளி நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கிடையே, டெல்லி மற்றும் வட இந்தியாவில் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கரோனா பரவிவரும் நிலையில் பட்டாசுகளை வெடித்தால் மேலும் காற்று மாசு அதிகரித்து குழுந்தைகள், முதியோர்கள் ஆகியோரின் உடல்நலனில் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, பட்டாசுகள் வெடிப்பதற்கு தற்காலிக தடைவிதிப்பது குறித்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயமே தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை: தீர்ப்பை ஒத்திவைத்த தேசிய பசுமை தீர்ப்பாயம்!
டெல்லி: தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபது ஆதர்ஷ் குமார் கோயல் கொண்ட அமர்வு, இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்டது. இந்திய பட்டாசுகள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் வழக்கறிஞர் ராஜ் பஞ்வானி, நீதிபதிகளுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழக்கறிஞர்கள், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பல்வேறு மாநில அரசு சார்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் தங்கள் வாதத்தினை முன்வைத்தனர்.
இதுகுறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருவதாக மேற்கு வங்க அரசு சார்பு வழக்கறிஞர் தெரிவித்தார். பட்டாசுகள் வெடிப்பது குறித்து முடிவை எடுக்க ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளதாக டெல்லி அரசு சார்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை நவம்பர் 9ஆம் தேதி ஒத்திவைத்து தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. முன்னதாக, பட்டாசுகளுக்கு தடை கோருவது குறித்து 23 மாநிலங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.