இந்தியாவில் கரோனா பரவல் தற்போதுதான் மெல்ல குறைந்துவருகிறது. ஒரு கட்டத்தில் தினசரி 95 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுவந்த நிலையில், தற்போது 60 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
கரோனா பரவல் குறித்து உத்தரப் பிரதேச அரசு அலுவலர்களுடன் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனையில் ஈடுபட்டார், அப்போது பேசிய அவர், "கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.
இருப்பினும், நாட்டின் கரோனா பரவலின் நிலையை தீர்மானிப்பதில், அடுத்த மூன்று மாதங்கள் மிக முக்கியமானதாக இருக்கும். வரவிருக்கும் குளிர் காலம் மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு நாம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், அப்போதுதான் கரோனாவை கட்டுப்படுத்த முடியும்.
உத்தரப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அதிகபட்ச முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும். பொதுஇடங்களில் மாஸ்க்குகளை அணிவது, சானிடைசர்களை பயன்படுத்தி கைகளை சுத்தமாக வைத்திருப்பது ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும்" என்றார்.