நாட்டை சூறையாடிவரும் கரோனா (கோவிட்-19) பெருந்தொற்றை, முன்னின்று எதிர்த்துப் போராடிவரும் மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்களின் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தொற்றுநோய் சட்டம் 1897இல் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, தொற்றுநோய் திருத்தச் சட்டம் 2020 என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இச்சட்டம் குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "கோவிட்-19 நோயை எதிர்த்துப் போராடிவரும் ஒவ்வொரு சுகாதாரப் பணியாளர்களையும் பாதுகாக்கும் நாம், கொண்டுள்ள உறுதியைப் பறைசாற்றும் விதமாகத் தொற்றுநோய் திருத்தச் சட்டம் 2020 அமைந்துள்ளது. பாதிப்பு என்று வரும்போது அதில் சமரசத்துக்கு இடமில்லை" என்றார்.