வெளியுறவுக்கொள்கை சிக்கல்
கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதி நீக்கத்துக்குப்பின், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. இதன் விளைவாக மத்திய அரசு காஷ்மீர் சார்ந்த கொள்கை முடிவுகளை தற்காலிகமாக மாற்றியுள்ளது.
கடந்த ஐந்து மாதத்திற்கும் மேலாக காஷ்மீர் மாநிலம் ராணுவத்தின் கடும் கட்டுப்பாட்டில் இருந்துவந்த நிலையில், தற்போது அது மெள்ள தளர்த்தப்படுகிறது.
காஷ்மீரில் மெதுவாக இணையச் சேவை திரும்பிவரும் நிலையில், தற்போது அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் சிக்கலின்றி பூர்த்தி செய்யும்விதமாக மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதேவேளையில், சமூகவலைதள சேவைகளின் அனுமதி காஷ்மீரில் தற்போதைக்கு சாத்தியமில்லை எனத் தெரிகிறது.
ஒரு துப்பாக்கி குண்டும் வெடிக்கவில்லை
அண்மையில் வெளிநாட்டுத் தூதர்கள் பலர் ஜம்மு-காஷ்மீர் சென்று பார்வையிட மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி அமெரிக்கா, வங்கதேசம், வியட்நாம், நார்வே, மாலத்தீவு, தென்கொரியா, மொராக்கோ, நைஜீரியா, அர்ஜென்டினா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் ஜம்மு காஷ்மீருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தத் தூதுவர்கள் ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர் ஆகியோரிடம் உரையாடினர். அதேவேளை, காஷ்மீரில் கைதுசெய்யப்பட்ட முன்னணி அரசியல் தலைவர்களை சந்திக்க அனுமதி அளிக்கவில்லை. காஷ்மீரில் சட்டப்பிரிவு நீக்கத்துக்குப்பின் ஒரு துப்பாக்கி குண்டும் வெடிக்கவில்லை எனத் தொடர்ச்சியாகத் தெரிவிக்கப்பட்டுவருகிறது.
அரசியல் சூழல் - இயல்புநிலை
அத்துடன் மத்திய அரசும் தனது அமைச்சர்களை, காஷ்மீருக்குப் பயணம் மேற்கொண்டு அம்மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னெடுக்கப்போகும் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
சிறப்புத் தகுதி நீக்கத்திற்குப்பின், காஷ்மீரில் மீண்டும் இயல்புநிலையை கொண்டுவரும் முயற்சியின் பகுதியாகவே, மத்திய அரசு இத்தகைய நடவடிக்கைகளை கொண்டுவந்துள்ளது.இருப்பினும்...
- குறிப்பிட்ட சில தூதுவர்களை மட்டும் காஷ்மீருக்கு அழைத்துச் செல்வது ஏன்?
- அவர்கள் காஷ்மீரில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னணி அரசியல் தலைவர்களை சந்திக்க அனுமதிக்காதது ஏன்?
- மக்களிடம் நன்மதிப்பை பெறவிரும்பும் அரசு அனைத்துக்கட்சி பிரதிநிதிகளை காஷ்மீருக்கு அனுப்பாதது ஏன்?