நாட்டை உலுக்கும் கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. சில தனியார் தொண்டு நிறுவனங்கள் அரசாங்கத்துடன் இணைந்து மக்கள் மத்தியில் கரோனா குறித்து விழிப்புணர்வை பாடல் மூலமாகவும், குறும்படம் மூலமாகவும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், ஆந்திராவில் வித்தியாசமான முறையில் கரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் வெம்பள்ளி மண்டல் பகுதியில் எஸ்.எஃப் பாஷா மருத்துவமனை உள்ளது. இங்கு ஏப்ரல் 4ஆம் தேதி, ஏப்ரல் 5ஆம் தேதியில் ராமதேவி, சசிகலா என்ற இரண்டு பெண்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் பாஷா, கரோனா விழிப்புணர்வுக்காக ஆண் குழந்தைக்கு 'கரோனா குமார்' என்றும், பெண் குழந்தைக்கு 'கரோனா குமாரி' என்றும் பெயர் சூட்டியுள்ளார். மருத்துவரின் ஆலோசனையை ஏற்றுக்கொண்ட பெற்றோர்கள் கரோனா பெயருக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.