இந்திய வரலாற்றின் ஒப்பற்ற நாயகன். வரலாற்றை அலைக்கழிக்கும் ஓர் அழியா சரித்திரம் 'நேதாஜி' சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினம் இன்று. ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு மிகப்பெரிய தலை வலியாய் விளங்கி இந்திய இளைஞர்களின் கனவாய் வாழ்பவர். பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்... ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால், இவரின் இறப்பு இன்று வரை சர்ச்சையாகவே தொடர்கிறது. சமகால அரசியலில், தலைவர்களை போட்டிபோட்டுக்கொண்டு சொந்தம் கொண்டாடுவது தொடர் கதையாகி வருகிறது. வல்லபாய் படேலைத் தொடர்ந்து பாஜகவின் கண்பார்வையில் போஸ் பட்டுள்ளார். ஆனால், இறுதிவரை இந்து - முஸ்லிம் ஒற்றுமையில் காந்தியின் பார்வையைக் கொண்டவர் சுபாஷ் சந்திர போஸ் என்று பாஜகவுக்குத் தெரியாது போலும்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெகுண்டெழுந்து தனது ஐ.சி.எஸ் பதவியை ராஜினாமா செய்தவர் சுபாஷ் சந்திர போஸ். ராஜினாமாவால் உங்கள் தாய், தந்தையர் வருத்தப்படமாட்டார்களா எனக் கேள்வி கேட்டதற்கு, 'என் தாய், தந்தையருக்கு வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் என் தாய்நாட்டின் வருத்தம் அதை விடப் பெரியது' என கர்ஜித்தார். மகாத்மா காந்தி, நேரு ஆகியோருக்கு எதிராக போஸை எழுப்ப சிலர் முயற்சிக்கின்றனர். அவர்களின் கொள்கையில் முரண்பாடு இருக்கலாம். ஆனால், அவர்களின் ஒரே குறிக்கோள் சுதந்திர இந்தியாவை அடைவது. காந்தி மேற்கொண்ட அகிம்சை போராட்டங்கள் எவ்வளவு தாக்கத்தை உண்டாக்கியதோ... அதே அளவில் சுபாஷ் சந்திர போஸின் போராட்டங்களும் தாக்கத்தை உண்டாக்கியது.
1924ஆம் ஆண்டு பர்மாவின் மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேதாஜியை முடக்க ஆங்கிலேய அரசு முயற்சி செய்தது. ஆனால், அப்போது நடைபெற்ற வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் சிறையிலிருந்தவாரே போஸ் வெற்றி வாகை சூடினார். அதுதான் வங்க மக்கள் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கை. மாண்டலே சிறையில் போஸ் காச நோயால் அவதிப்பட, அனைவரும் அவரை விடுவிக்கச் சொல்லி போராட்டம் செய்தனர். அவரது உயிர் ஆபத்தான நிலையை எட்டியதால் இரண்டு நிபந்தனைகளோடு, அவரை விடுதலை செய்ய ஆங்கிலேய அரசு நினைத்தது.