கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வரிசையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ஆட்சியிலும், கட்சியிலும் கடந்த இரண்டு மாதங்களாக பெரும் குழப்பம் தொடர்ந்தது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு அரசியல் பனிப்போராக மூண்டிருந்தது.
மாநில முதலமைச்சராக உள்ள அசோக் கெலாட், தங்களை அடிமைப் போல நடத்துவதாக சச்சின் பைலட் ஆதரவாளர்கள் தரப்பு குற்றஞ்சாட்டியது. சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பதவிகளை அசோக் கெலாட் பறித்தார். சச்சின் ஆதரவு அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதால் இந்த மோதல் ஆட்சிக்கே ஆபத்தான நிலையை உருவாக்கியது.
இந்நிலையில், ராஜஸ்தான் அரசியல் குழப்பத்திற்கு தீர்வளிக்கும் விதமாக அதிருப்தி தலைவரான சச்சின் பைலட்டின் கோரிக்கைகளை பரிசீலிக்க மூன்று பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்தது. கடந்த இரண்டு மாதமாக ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் நிலவி வந்த அரசியல் குழப்பம் ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை சச்சின் பைலட் சந்தித்தார்.
காங்கிரஸ் உயர் தலைவருடனான சந்திப்புக்கு பின்னர் கட்சிக்காக பணியாற்ற பைலட் ஒப்புக் கொண்டதால் இந்த பிரச்னை இப்போது முடிந்துவிட்டதாகத் அறிய முடிகிறது. இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த முதலமைச்சர் அசோக் கெலாட், "காங்கிரஸ் கட்சிக்கு எழுந்த பிரச்னைக்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி தலைமையில் ஒரு தீர்வு காணப்பட்டது.
கடந்த ஒரு மாதத்தில் கட்சியில் ஏற்பட்ட மனக்கசப்புகள், தவறான புரிதல்கள் என அனைத்தும் நாடு, மாநிலம், மக்கள், ஜனநாயகத்தின் நலன்களுக்காக நாம் மன்னிக்க வேண்டும், மறக்க வேண்டும். ஜனநாயகத்தை காப்பாற்றுவது நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடகா, மத்தியப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம் போன்ற அரசுகளை கவிழ்க்க நடைபெற்ற சதியை இணைந்து முறியடித்து வெல்வோம்.
அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரி, நீதித்துறை போன்ற அனைத்தும் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை நாம் அறிவோம். இது மிகவும் ஆபத்தான விளையாட்டு, ஜனநாயகத்தின் மீதான மரியாதையைக் குறைக்கின்றது" என்று அவர் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை (ஆகஸ்ட் 14) தொடங்கவுள்ள நிலையில், முதலமைச்சர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சியான பாஜக முடிவு செய்திருப்பது கவனிக்கத்தக்கது.