உத்தர பிரதேசம் மாநிலத்தின் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை, ஒருவர் நாட்டு கைத்துப்பாக்கியைக் காட்டி, கீழே தள்ளுகிறார். இதனை கண்டு அச்சம் கொண்ட அந்த மூதாட்டி எழுந்து தன் வீட்டிற்குள் ஓட முயற்சித்தபோது, அந்த நபர் தனது கையில் இருந்த துப்பாக்கியால் சுடுகிறார். சுடப்பட்ட அந்த மூதாட்டி கீழேவிழுந்து வலியால் துடிதுடித்து இறக்கிறார்.
இந்த சம்பவத்தை அந்த மூதாட்டியின் வீட்டருகே உள்ள ஒருவர் பதிவு செய்து பொதுத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
அண்மையில், வெளியான இந்த காணொலி சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இந்த காணொலியை கண்ட தேசிய பெண்கள் ஆணையத்தினர், மூதாட்டியை சுட்டுக் கொன்ற குற்றவாளிக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறை தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
இதற்கிடையில், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட மோனு கைது செய்யப்பட்டுள்ளார். படுகொலைக்குப் பின்னர் அவருக்கு அடைக்கலம் கொடுத்த மற்றொரு நபரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.