நேற்று (ஆக. 31) உத்தரப் பிரதேசத்திலிருந்து டெல்லி தேசியத் தலைநகர் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில், டெல்லியைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது, அவருடன் பேருந்தில் 45 பயணிகள் பயணித்துள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தச் சம்பவத்தின்போது தாங்கள் அனைவரும் உறங்கிவிட்டதாக பயணிகள் கூறியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, உத்தரப் பிரதேச காவல் துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான இத்தகைய மோசமான, கொடூரமான குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது கவலையளிக்கிறது.
இந்த விவகாரத்தில் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தொடக்கத்திலிருந்து இந்தச் சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஒரு விரிவான அறிக்கையாக தங்களுக்கு அனுப்ப வேண்டும்” என்று கோரியுள்ளார்.