கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதற்கேற்ப கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதம் மட்டும், பெண்களுக்கு எதிரான குற்றம் குறித்து 2,043 புகார்களைப் பெற்றுள்ளதாக தேசிய பெண்கள் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜூன் மாதம் பெறப்பட்ட புகார்களில் 452 புகார்கள் குடும்ப வன்முறை தொடர்பானவை; மேலும், பெண்களை உளவியல் ரீதியாகவும், மன ரிதீயாகவும் கொடுமைப்படுத்துவது தொடர்பாக 603 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2,379 புகார்களை தேசிய பெண்கள் ஆணையம் பெற்றிருந்தது. அதற்கு பின் இவ்வளவு அதிகமான புகார்களை தேசிய பெண்கள் ஆணையம் பெறுவது இதுவே முதல்முறை.
இது குறித்து தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறுகையில், "நாங்கள் இப்போது சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பதாலேயே அதிக புகார்களைப் பெற முடிகிறது. நாங்கள் தற்போது ட்விட்டர் உள்ளிட்ட மற்ற சமூக வலைதளங்கள் வாயிலாகவும் புகார்களை பெறுகிறோம்.