நாட்டில் நடக்கும் குற்றங்கள், பதிவான குற்ற வழக்குகள் குறித்து ஆண்டுக்கு ஒரு முறை தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிடுவது வழக்கம். 2017ஆம் நடந்த குற்ற வழக்குகள் குறித்த அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் நேற்று வெளியிட்டது. இதில், நாட்டில் நடக்கும் கும்பல் வன்முறை குறித்து தகவல் ஏதும் இடம்பெறவில்லை.
கும்பல் வன்முறை
நாடு முழுவதும் இஸ்லாமியர்கள், தலித்துகள் ஆகியோருக்கு எதிராக கும்பல் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துவருவதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டினர். முக்கியமாக மத அடிப்படைவாதம், பசு கடத்தல் குறித்தே கும்பல் வன்முறைகள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கும்பல் வன்முறையைத் தடுக்கக் கோரி பாலிவுட் பிரபலங்கள், எழுத்தாளர்கள் எனப் பலர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர். அவர்களுக்கு எதிராக தேச துரோக வழக்கு தொடரப்பட்டது.