பிரபல தனியார் பத்திரிகை நிறுவனம் ஒன்று நடத்திய, நாட்டின் பிரபலமான முதலமைச்சர்கள் குறித்த ஆய்வில்,ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் முதலிடம் பிடித்துள்ளார்.
82.96 புள்ளிகளுடன் நவீன் பட்நாயக் முதலிடத்திலும், அவரைத் தொடர்ந்து சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.
இந்த ஆய்வின்படி, மத்திய பாஜக அரசின் முதலமைச்சர்களான மனோகர் லால் கட்டார் (ஹரியானா) 4.47 புள்ளிகளுடனும், திரிவேந்திர சிங் ராவத் (உத்ரகாண்ட்) 17.72 புள்ளிகளுடனும் இறுதி இடங்களைப் பிடித்துள்ளனர்.
தனது தந்தை பிஜு பட்நாயக்கின் பெயரில் தொடங்கப்பட்ட கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சிக்கு தலைமை தாங்கிவரும் நவீன் பட்நாயக், ஐந்தாவதுமுறையாக அம்மாநிலத்தில் முதலமைச்சராகப் பதவி வகித்துவருவது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு அடுத்த இடத்தில் 81.06 புள்ளிகளைப் பெற்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் உள்ளார். ஆக்ரோஷமான அரசியல்வாதியாக அறியப்படும் இவர் 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது