உலகில் 185 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கோவிட்-19 வைரஸ் தொற்றால் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகையே அச்சுறுத்தும் இந்த வைரஸ் தொற்றை ஜனவரி 31ஆம் தேதி பெருந்தொற்றாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
இருப்பினும் சமூக வலைதளங்களில் இந்த வைரஸ் தொற்றை மனிதர்கள்தான் உருவாக்கினார்கள் என்றும் தற்போது உலகில் மிகப்பெரிய ஒரு பயோ வார் எனப்படும் உயிரியல் போர் நடந்துவருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிவருகின்றன. மக்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் அதை நம்பத் தொடங்கிவிட்டனர். எனவே, இந்த கரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை விரிவாகப் பார்ப்போம்.
கோவிட்-19 வைரஸ் தொற்று 1960களில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வகை வைரஸ் குடும்பத்தால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் தன்னைச் சுற்றி கிரீடம் போன்ற புரதங்களைக் கொண்டுள்ளது. எனவே, இந்த வைரஸ் கரோனா என்ற பெயரைப் பெற்றது.
2019ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி, இந்த வைரஸ் தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பிற்குச் சீனா தெரியப்படுத்தியது. அப்போது இதற்கு SARS-CoV-2 என்று பெயரிடப்பட்டது.
இந்த வைரஸ் தொற்று நூற்றுக்கணக்கானோருக்குப் பரவத் தொடங்கியவுடன் வைரஸ் பரவல் குறித்த தகவல்களை உலக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்ய ஏதுவாக சீனா வெளியிட்டது.
இந்த வைரஸ் தொற்று விலங்குகளிடமிருந்து மனிதர்களை முதலில் தாக்கியது; அதைத் தொடர்ந்து வைரஸ் தொற்று மனிதர்களிடையே வேகமாகப் பரவியுள்ளது, சீனா வெளியிட்ட தரவுகளில் தெளிவாகத் தெரிந்தது.
சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான் என்ற நகரிலுள்ள காட்டு விலங்குகளை விற்கும் ஒரு சந்தையிலிருந்து இந்த வைரஸ் தொற்று முதலில் மனிதனுக்குப் பரவியதாக ஆரம்பக்கட்ட ஆராய்ச்சிகளில் தெரியவந்தது.
சமூக வலைதளங்கில் பரவிவரும் தகவல்கள் குறித்து நுண்ணுயிரியல் இணைப் பேராசிரியர் கிறிஸ்டியன் ஆண்டர்சன் கூறுகையில், “பொது வெளியில் தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவல்களை வைத்து பார்க்கும்போது இது மனிதர்களால் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த வைரஸ் இயற்கையாக உருவானதாகவே தெரிகிறது” என்றார். இந்த கருத்தைப் பல ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்கின்றனர்.
மூன்று கரோனா வைரஸ் தாக்குதல்!
இந்த 21ஆம் நூற்றாண்டில் மட்டும் இதுவரை மூன்று கரோனா வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதன்முதலில் சீனாவில் 2003ஆம் ஆண்டு SARS எனப்படும் ஒரு வகையான கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த வைரஸ் எவ்வாறு மனிதர்களுக்குப் பரவியது என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் இது வௌவாலில் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் பரவியது. 8,000க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 10 விழுக்காட்டினர் உயிரிழந்தனர்.