இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பிரத்யேகமாக பேசிய முருகன், விழுப்புரம் சம்பவம் குறித்து தகவல் சேகரித்து வருவதாகவும், விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.
என்ன நடந்தது?
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியையடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.சக்திவேல்(24). இவர் தனியார் பெட்ரோல் பங்க் ஊழியர் ஆவார். இவர் கடந்த புதன்கிழமை மதியம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினார். அப்போது, அவர் வயல்வெளி ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்ததாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில், அருகில் வயல் வேலை செய்து கொண்டிருந்த பெண் ஒருவர் சக்திவேல் தனது அந்தரங்க உறுப்பை காட்டும் விதமாய் தவறாக நடந்து கொண்டார் என்றார்.
பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்:
இதன்பேரில் அந்த பெண்ணின் உறவினர்கள் சக்திவேலை கும்பலாக சேர்ந்து அடித்தனர். இதில்படுகாயமடைந்த சக்திவேல் மரணமடைந்தார். சக்திவேல் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார் என்று ஒரு தரப்பும், அவர் சிறுநீர் கழிக்கவே அங்கே நின்றிருந்தார் என்று சக்திவேல் குடும்பத்தினரும் கூறிவருகின்றனர்.
காவல் துறை நடவடிக்கை:
இந்தச் சூழலில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய துணை ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் சக்திவேலை மரத்தில் கட்டி வைத்து அடித்ததாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில்மூன்று பெண்கள் உட்பட ஏழு பேரை கைது செய்துள்ள காவல் துறை அவர்கள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலைக்குற்றம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள எழுவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பட்டியலினத்தோர் ஆணையம்:
இந்த வழக்கில் காவல் துறை தீவிரம் காட்டியிருக்கும் வேளையில், தேசிய பட்டியலினத்தோர் ஆணையமும் தலையிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் ஈடிவி பாரத்திடம் கூறியதாவது, "விழுப்புரம் சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது. இது தொடர்பான தகவல்களை சேகரித்து வருகிறோம். அடுத்தகட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்" என்று கூறினார்.
எனவே, இந்த விவகாரத்தில் தேசிய பட்டியலினத்தோர் ஆணையம், தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறைக்கு நோட்டீஸ் வழங்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டு:
மேலும், அரசியல் கட்சிகளும் இந்த பிரச்னையை கையிலெடுத்துள்ளன. குறிப்பாக விழுப்புரம் எம்.பி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார், மாநில அரசின் அலட்சியப் போக்கால் பட்டியலினத்தவருக்கும் பழங்குடியினருக்கும் எதிரான தாக்குதல் அதிகரிப்பதாக கூறினார்.
விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்:
இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய ரவிக்குமார், “தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை 2018இன் படி தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. குறிப்பாக முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி அமர்ந்த பிறகு, இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் ஆறு மாதத்துக்கு ஒருமுறை முதலமைச்சர் கூட்டம் போட்டு எஸ்சி/எஸ்டி மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்துள்ளதா? அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று விசாரிக்க வேண்டும். ஆனால், முதலமைச்சர் பழனிசாமி, கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரேயொரு கூட்டம் மட்டுமே நடத்தியுள்ளார்” என்றார்.
நடவடிக்கை இல்லை:
மேலும் பேசிய அவர், “மாவட்ட ஆட்சியர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இக்கூட்டத்தை மாவட்ட அளவில் நடத்த வேண்டும். முதலமைச்சரே இந்த விஷயத்தில் அக்கறை காட்டாமல் உள்ளதால், மாவட்ட ஆட்சியர்களும் கண்டும் காணாமல் உள்ளனர். இது தொடர்பாக விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு எம்பி என்ற முறையில் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன். ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை, இருக்கிற நடைமுறைகளை சரியாக பின்பற்றினால் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகளை குறைக்கலாம்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை: திருமாவளவன் ஆதங்கம்