தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உண்ணும் உணவே நீங்கள்? உண்மை சொல்லும் தேசிய ஊட்டச்சத்து வாரம்! - தேசிய ஊட்டச்சத்து வாரம் கட்டுரை

உலகளவில் இந்திய பொருளாதாரமும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியும் வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்ற செய்தி நம் விவாதங்களிலிருந்து மறையும் முன்பே, மீண்டும் நம்மை மிகப்பெரிய விவாதத்தை நோக்கித் தள்ளுகிறது இந்த தேசிய ஊட்டச்சத்து வாரம்.

national nutrition week

By

Published : Sep 1, 2019, 5:45 PM IST

Updated : Sep 3, 2019, 10:27 AM IST

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக, இந்தியக் குழந்தைகளில் சரிபாதி விழுக்காடு ஊட்டச்சத்து பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. இங்கு பிரச்னை என்பது ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவது மட்டுமல்ல, ஊட்டச்சத்து மிகுதியால் பாதிக்கப்படுவதும் கூட...

இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பான 'அசோசம்', லண்டனைச் சேர்ந்த தனியார் அமைப்பும் இணைந்து ஊட்டச்சத்து குறைபாடு குறித்து உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில், ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலினை அளித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி, ஐந்து வயதிற்குட்பட்ட 48 விழுக்காடு குழந்தைகள் ஊட்டச்சத்து சம்பந்தபட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுவருவது தெரிகிறது. இதில், 37 விழுக்காட்டினர் ஊட்டச்சத்து குறைபாட்டாலும், 11 விழுக்காட்டினர் ஊட்டச்சத்து மிகுதியாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விழுக்காடுகள்தான் இந்திய பொருளாதாரத்தையும், சுகாதார நிலைகளையும் கேள்விக்குறியாக்குகின்றன. ஏனெனில், இந்தியாவின் மக்கள் தொகையில் பெரும்பாலான மக்கள் நடுத்தர வர்க்கத்தினராகவும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் தங்களது வருமானத்தின் பெரும் பகுதியினை உணவிற்கும், மருத்துவ செலவுகளுக்கும் ஒதுக்குகிறார்கள். அந்த மருத்துவச் செலவுகள் பெரும்பாலும் குழந்தைகளுக்கும், வயது முதிர்ந்தோர்களுக்குமானதாகவே உள்ளன.

குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டாலும், முதியவர்கள் நீரிழிவு நோயாலும் அவதியுறுகின்றனர். இந்நோய்களுக்கான காரணங்களை ஆய்வு செய்தால் வெவ்வேறு கோணங்களில், புரிதல்களின் அடிப்படையில் வெளிவரும் விடைகள் ஒத்த கருத்தையே முன்வைக்கின்றன. அது மாறிவரும் கலாசாரமும், உலகமயமாக்கலின் தாக்கங்களும் என்பதே...

அடிப்படையில், இந்தியா பல்வேறு கலாசாரங்களை தன்னுள் கொண்ட பன்முக நாடு. ஒவ்வொரு கலாசாரத்தை பின்பற்றுவோருக்கும் ஒருசில பண்பாடுகளும், வாழ்க்கை முறைகளும் உண்டு. தாங்கள் வாழும் பகுதியின் தட்பவெப்ப சூழலுக்கேற்பவும், பருவங்களுக்கேற்பவும், வயதின் அடிப்படையிலும் கலாசாரம் சார்ந்த வெவ்வேறு உணவுப் பொருட்களை கொண்டிருப்பர்.

பாரம்பரிய உணவுப் பொருட்கள்

அந்த உணவுப் பொருட்கள் மக்களை உடலளவில் மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும் பலப்படுத்துகிறது. அது எவ்வாறு சாத்தியம் என்பவர்களின் கேள்விகளுக்கும் இங்கே பதிலுண்டு. கலாசாரத்தை மையப்படுத்தி இதுவரை நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் நம்மைச் சுற்றி எளிதில் கிடைக்கப்பெறுபவையாகவே இருந்துள்ளது. அவை தட்பவெப்ப சூழலுக்கேற்ப நம்மை தகவமைத்துக்கொள்ள உதவுகிறது.

சைவ உணவுகளோ, அசைவ உணவுகளோ எந்த கலாசாரமும் ரசாயனம் கலக்கப்பட்ட பொருட்களை தனது மக்களுக்கு பரிந்துரைப்பதில்லை. அப்படியிருக்க, மாறிவரும் கால சூழலுக்கேற்ப நாம் உலகளாவிய உணவுகளை நமக்குள் நாகரிகம் என்னும் பெயரில் திணித்துக்கொண்டிருக்கிறோம். எனவே, இந்த சூழலுக்கு ஒவ்வாத உணவுகளும் நாம் ஆரோக்கியமற்று இருப்பதற்கு ஒரு காரணம்.

அதுமட்டுமின்றி, அறிவியல் வளர்ச்சியால் தற்போது நாம் உண்ணும் உணவுப்பொருட்கள்ரசாயனங்கள் நிறைந்த பூச்சிக்கொல்லி மருந்துகளாலும், பதப்படுத்த உபயோகிக்கப்படும் மனிதர்களுக்கு ஒவ்வாத ஹைட்ரோ குளோரோ புளோரோ கார்பன்களாலும் நிறைந்து காணப்படுகிறது.

நாம் உண்ணும் உணவில் உள்ள அத்தியாவசிய சத்துகளைக் காட்டிலும், ரசாயனப் பொருட்கள் நிறைந்திருப்பதே சில ஆண்டுகளாக இந்தியா ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அதிகளவில் கொண்டிருப்பதற்கான முக்கிய காரணம். இத்தகைய பொருட்கள் நமக்கு ஊட்டச்சத்துகளை கொடுக்காவிட்டாலும், வோறொரு நோயினை உடலிற்கு கொடுக்காமல் இருந்தால் போதும். ஆனால், இங்கு அதுவும் நடப்பதில்லை. தேவையற்ற கொழுப்புகளையும் அமிலத்தன்மைகளையும் உடலில் சேர்த்து இருதய நோய், ரத்த அழுத்தம், கணையம், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கி நோய்களின் எண்ணிக்கையையும், நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இவை மட்டும்தான் காரணங்களா என்றால், இல்லை. இந்தியாவில் நிலவிவரும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் இதற்கான முக்கிய காரணம் என்று கூறலாம். மத்திய அரசின் திட்டக்குழு நகரத்தில் வாழும் மனிதர்களுக்கு நாளொன்றுக்கு 32 ரூபாயும், கிராமத்தில் வாழும் மனிதர்களுக்கு நாளொன்றுக்கு 26 ரூபாயும் உயிர்வாழ போதுமானது என கூறியுள்ளது.

இந்தக் கூற்று மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் உணவு மானியங்கள் குறைக்கப்படுவதற்கும், பொதுவிநியோகத் தலமாக உள்ள ரேசன் கடைகளின் எண்ணிக்கைகள் குறைக்கப்படுவதற்கும், அரசிடமிருந்து மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் படிப்படியாக குறைக்கப்படுவதற்கும், மக்களிடமிருந்து அரசு அதிக வரிவசூல் செய்வதற்கும் ஏதுவாக அமையலாம். இவற்றில் சில நடந்துகொண்டும் உள்ளன.

'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்ற பழமொழி நம்மிடம் உண்டு. அப்பழமொழி மனிதன் வாழ்வதற்கு தேவையான நற்பண்புகள் அனைத்தும் ஒரு குழந்தைக்கு ஐந்து வயதிற்குள்ளாகவே அறிவுறுத்தப்பட வேண்டும் என்கிறது. அதேபோலதான் வாழ்வை வளமாக வாழ ஒரு குழந்தைக்கு, பிறந்தது முதல் ஐந்து வயதிற்குள்ளாக முழுமையான ஊட்டச்சத்துகள் கிடைக்க வேண்டும்.

சரிவிகித உணவுமுறை

ஊட்டச்சத்து என்பது புரதம், கொழுப்பு, விட்டமின், நார்ச்சத்துகள் என பலவற்றின் சங்கமம். மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் திறம்பட செயல்பட சரிவிகித ஊட்டச்சத்து அவசியம். அப்படியில்லையெனில், அந்த ஊட்டச்சத்துகளின் குறைபாட்டால் ஏற்படும் தாக்கம் வாழ்நாள் முழுவதுமே பிரதிபலித்துக்கொண்டிருக்கும்.

இதுபோன்ற குறைபாடுகளிலிருந்து மக்களை காக்கவும், சரிவிகித உணவுகளின் தேவையை மக்களிடம் உணர்த்தவும் ஆண்டுதோறும் அரசால் பயிற்சி பட்டறைகள், திரைப்படங்கள், கண்காட்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.

மத்திய மாநில அரசுகள் பள்ளிக் குழந்தைகளுக்கு சரிவிகித உணவு வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தாலும், ஒருபுறம் அரசே பள்ளிக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவிற்கு ஆதார் கட்டாயமாக்கப்படும் என்கிறது. கழிவறைகளில் அங்கன்வாடி குழந்தைகளுக்கான உணவினை தயாரிக்கிறது. மதிய உணவிற்கு சப்பாத்தியுடன் உப்பை அளிக்கிறது.

இந்தியாவின் எதிர்கால அடையாளமான குழந்தைகள் இப்படியான உணவுப்பொருட்களை உண்டு வளர்கின்றனர். அதேசமயத்தில், அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தியாவின் பாரம்பரிய உணவுப்பொருட்களை புறக்கணித்து, பன்னாட்டு தின்பண்டங்களை இறக்குமதி செய்து, அந்நிறுவனங்களுக்கான கிளைகளை இந்தியா முழுவதும் பரப்ப உதவிவருகிறது.

மேற்கத்திய உணவுப்பொருட்கள்

இந்நிறுவனங்கள் நாட்டிற்கான பொருளாதார வளர்ச்சிக்கு உதவி புரிந்தாலும், ஒரு சராசரி இந்தியக் குடிமகன் தன் வருவாயினை மருத்துவ செலவுகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அளித்துவருவது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அரசு இப்பொருட்களால் உண்டாகும் ஆபத்துகளை அறிந்து மக்களின் நலனையும், நாட்டின் பொருளாதார நிலைகளையும் கருத்தில்கொண்டு மேற்கத்திய உணவுப்பொருட்களுக்கு தடைவிதிக்கலாம். இல்லையெனில், ஆயிரம் விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொண்டாலும் இந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படுவது சந்தேகமே.

Last Updated : Sep 3, 2019, 10:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details