”நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்” மற்றும் “நீங்கள் குறைவாக சாப்பிட வேண்டியதில்லை, நீங்கள் சரியாக சாப்பிட வேண்டும்” என்ற வரிகளை பலரும் கடந்து வந்திருப்பீர்கள். அதன் ஆழமான அர்த்தம் என்னவென்றால் ஆரோக்கியமான உடல் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் முக்கியதவத்தை காட்டுகிறது. ஒருவரின் உணவில் இருக்கும் ஊட்டச்சத்து பல நோய்களைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது மற்றும் சிகிச்சையளிப்பதற்கு உதவியாக உள்ளது.அன்றாட வாழ்க்கை முறையை மாற்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் நிச்சயம் தேவை என்பது அனைவரும் தெரிந்த உண்மையாகும்!
மக்கள் மத்தியில் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது குறித்தும் அதனால் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளை குறித்து நிகழ்ச்சிகளும், நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படும். அதன்படி, இந்தாண்டு ராஷ்டிரிய போஷன் மா”2020 (Rashtriya Poshan Maah) என்று கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது
போஷன் மாவுக்கு இரண்டு முக்கிய நடவடிக்கைகள் உள்ளன. முதலாவது, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு (SAM) உள்ள குழந்தைகளை அடையாளம் காணுதலும், இரண்டாவது,சமையலறை தோட்டம் திட்டத்தை மேம்படுத்துவதும் ஆகும்.
போஷன் அபியான் திட்டம் பிரதமரால் 2018இல் மார்ச் மாதம் ராஜஸ்தானில் ஜுன்ஜுனுவில் இருந்து தொடங்கப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, ராஷ்டிரிய போஷன் மா 2020 திட்டமானது ஆறு வயது வரையிலான குழந்தைகள், இளம் பருவ பெண்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வாரத்தை விமர்சையாக கொண்டாடுவதன் நோக்கமானது நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் ஊட்டச்சத்து செய்தியை எடுத்துச் செல்வதும், குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உணவு, சிகிச்சை மற்றும் தடுப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை புரிய வைக்க தான். குறைந்தப்பட்சம் ஆறு மாதங்களுக்கு நிச்சயம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் வேண்டும் என்ற விழிப்புணர்வுகளை தாய்மார்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இது தவிர, போஷன் மாவில் சமையலறை ஊட்டச்சத்து தோட்டங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மக்கள் சத்தான காய்கறி மற்றும் பழம் தாங்கும் தாவரங்கள் மற்றும் மரங்களை வீட்டிலேயே நடவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறது. நிலம் இல்லாதவர்கள் பானை செடிகள் மற்றும் மொட்டை மாடிகளில் தோட்டங்களை வளர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.