1947 ஜூலை 22ஆம் தேதி மூவர்ண இந்திய தேசிய கொடியை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22ஆம் தேதி தேசிய கொடி ஏற்பு தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய கொடி ஏற்பு தினத்தை கொண்டாடுவதன் மூலம், நமது தேசியக் கொடியை நினைவுகூர்வதோடு மட்டுமல்லாது நமது கொடியின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளவும், நமது தேசியக் கொடிக்கு மனமார்ந்த வணக்கம், கவுரவம் மற்றும் மரியாதை செலுத்துவதோடு, இந்திய கலாசாரங்களையும் மரபுகளையும் நமது புதிய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும்.
தேசபக்தியின் உண்மையான அர்த்தத்தை எடுத்துக் காட்டுவதற்கும், இந்திய மக்களிடையே குறிப்பாக இளைஞர்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரிடையே அதன் உண்மையான சாரத்தையும் ஆற்றலையும் பரப்புவதற்காகவும் மூவர்ண இந்திய தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது. தேசிய கொடி ஏற்பு தினத்தை கொண்டாடுவது என்பது இந்திய தேசியக் கொடியின் மதிப்பை மக்களுக்கு உணர்த்துவதற்கும், இந்தியக் கொடியின் வரலாற்றை அறிந்து கொள்வதற்குமான மற்றொரு முக்கியத்துவமும் உள்ளது.
இந்திய தேசிய கொடி ஏற்பு தினத்தின் வரலாறு
பிங்காலி வெங்கய்யா வடிவமைத்த இந்திய தேசியக் கொடி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் 1947 ஆம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முதன்முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அதனால்தான் இந்த நாள், 1947 முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் "இந்திய தேசியக் கொடி ஏற்பு தினம்" என்று கொண்டாடப்படுகிறது. அரசியலமைப்பு சட்ட கூட்டத்தில் "இந்திய டொமினியனின் அதிகாரபூர்வ கொடி" என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபோது தேசியக் கொடியின் தற்போதைய வடிவம் நடைமுறைக்கு வந்தது.
நமது தேசியக் கொடியின் பரிணாம வளர்ச்சி
முதல் கொடி: இந்தியாவில் முதல் தேசியக் கொடி ஆகஸ்ட் 7, 1906 அன்று கொல்கத்தாவின் கல்கத்தாவில் உள்ள பார்சி பகன் சதுக்கத்தில் (கிரீன் பார்க்) ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் கொடி நீள்வடிவில் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய மூன்று பாகங்களால்ஆனது.
இரண்டாவது கொடி: எழு நட்சத்திரங்கள் உள்ள 'சப்தரிஷி கொடி' என்று அழைக்கப்படும் இது 1907 ஆகஸ்ட் 22 அன்று ஸ்டுட்கார்ட்டில் நடைபெற்ற சர்வதேச சோசலிச காங்கிரஸில் ஏற்றப்பட்டது.
மூன்றாவது கொடி: 1917-ல் நமது அரசியல் போராட்டம் ஒரு திட்டவட்டமான நிலையில் இருந்தபோது மூன்றாவது கொடி உருவானது. டாக்டர் அன்னி பெசன்ட் மற்றும் லோக்மண்ய திலக் ஆகியோர் சுயராஜ்ய இயக்கத்தின் போது அதை ஏற்றினர். இந்த கொடியில் ஐந்து சிவப்பு மற்றும் நான்கு பச்சை நேர்கோல் நீள்வடிவம் ஆகியவற்றில் மேல் சப்தரிஷி கொடியில் உள்ள ஏழு நட்சத்திரங்கள் என மாறி மாறி அமைக்கப்பட்டன,. இடது புற மேல் மூலையில் (கொடிக்கம்ப முனை) யூனியன் ஜாக் வடிவம் இருந்தது. மற்றொரு மூலையில் ஒரு வெள்ளை பிறைநிலா மற்றும் நட்சத்திரமும் இருந்தது.
நான்காவது கொடி: 1921-ல் பெஸ்வாடாவில் (தற்போதைய விஜயவாடா) கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தின் போது ஒரு ஆந்திர இளைஞர் ஒரு கொடியைத் தயாரித்து காந்திஜிக்கு எடுத்துச் சென்றார். இது இரண்டு முக்கிய சமூகங்களை, அதாவது இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை குறிக்கும் சிவப்பு மற்றும் பச்சை என்று இரண்டு வண்ணங்களால் ஆனது. இந்தியாவின் மீதமுள்ள சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வெள்ளை நிற’ பகுதியையும், தேசத்தின் முன்னேற்றத்தை குறிக்கும் ராட்டை ஆகியவற்றை சேர்க்க காந்தி பரிந்துரைத்தார்.
ஐந்தாவது கொடி: 1931-ம் ஆண்டு கொடியின் வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டமாக இருந்தது. மூவர்ணக் கொடியை நமது தேசியக் கொடியாக ஏற்றுக்கொண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கொடி, தற்போதுள்ள காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறத்துடன், மத்தியில் மகாத்மா காந்தியின் ராட்டையும் இடம்பெற்றிருந்தது. இது எந்தவொரு இனவாத முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை விளக்க வேண்டும் என்றும் தெளிவாகக் கூறப்பட்டது.