பெரும்பாலும் பலரால் விரும்பக்கூடிய, ஆசைப்படக்கூடிய ஒரு வளர்ப்பு ஜீவன் நாய். நாய், பூனை இரண்டும் வளர்ப்பு பிராணிகள். இருந்தும் மனிதர்கள் பூனையை காட்டிலும் நாயையே அதிகம் விரும்புகிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.
உலகில் பல இடங்களில், வீட்டில் வளர்த்தவர்களாலேயே நாய்கள் சாலையில் தூக்கி வீசப்படுகின்றன. அனைவரும் நாயை வளர்த்து அதன் இனத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக கொலின் என்ற பெண் 'ஷெல்டி' எனும் நாயை தத்தெடுத்துக்கொண்டார்.
இதன்மூலம், முதன் முதலில் 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் இந்த தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. இதனை ஆரம்பித்துவைத்ததும் கொலின்தான்.
மனிதர்களுக்கு நாயினால் பல இடங்களில் நன்மை நேர்ந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள்வரை அதனை விரும்பாதவர்கள் குறைவு. ஒருவர் புதிதாக வளர்ப்பதற்கு நாயை தனது வீட்டிற்கு தூக்கிக்கொண்டு வந்தால் நாளடைவில் வீட்டில் ஒருவராகவே அந்த நாய் மாறிவிடும்.
வளர்த்தவரின் வீட்டிற்கு பாதகம் செய்யாது என்பதற்கு நாய் ஒரு சிறந்த உதாரணம். வீட்டின் காவலாளி அவன், நாய் வீட்டில் இருந்தால் அதனுடைய அனுமதி இல்லாமல் புதிதாக ஒரு பொருள்கூட உள்ளே நுழைய முடியாது. அதற்கு நீங்கள் ஒன்று செய்தால், அதனை பல மடங்கு திருப்பி கொடுத்துவிடும். நாய் நன்றியுள்ளவன் என்பதற்கு அவன் மட்டுமே ஆகச் சிறந்த உதாரணம்..!
நாய்களை பற்றி நாம் அறிந்தும், கேட்கும் செய்திகள் அனைத்தும் உண்மையே. வீட்டில் அதற்கு ஒருவர் உணவு தருகிறார் என்றால், அவரை தவிர வேறு எவர் வைத்தாலும் சாப்பிடாது. நாய்களுக்கு பொறாமை குணம் அதிகம், வீட்டில் வளர்ப்பவர்களிடம் கேட்டால் அதனை லைவ்வாக நிரூபித்துக் காட்டுவர். நாய் மனிதர்களுக்கு கிடைத்த நான்கு கால் நண்பன்!
நாய்களுக்கு நுகர்தல் தன்மை அதிகம். ஒருவரது துணியின் வாசனையை வைத்தே அவர் எங்கே இருப்பார் என்பதை கண்டறிந்துவிடும். அதனால்தான் காவலர்களுக்கே உதவும் ஏழாம் அறிவாக அவன் திகழ்கிறான். காவல்துறை, ராணுவம் உள்ளிட்டவைகளில் நாயின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. மோப்ப நாயை கொண்டுவாருங்கள் அதனை வைத்து குற்றவாளிகளை பிடித்துவிடலாம் என்று உறுதியாக சொல்லும் அளவிற்கு நம்பகத்தன்மை உடையது நாய்.
நாய் மீது அலாதி பிரியம் கொண்டவர்கள் அதனை ஒரு நிமிடம்கூட தனித்துவிடமாட்டார்கள். தனிமையில் வாழ்பவருக்கு நாய் ஒரு நல்ல கம்பெனியன், அதனுடன் விளையாடுவதிலேயே நேரம் சென்றுவிடும் என்று கூறுவர். பிரியம் கொள்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், அதனைக் கண்டாலே அருவருப்பாக தூரத்தில் நிற்பவர்களும் இங்குள்ளனர்.
நாயை செல்லம் கொஞ்சுபவர்களை கண்டாலே முகத்தை சுழித்துக் கொள்வார்கள் சிலர். வீட்டிற்குள் நாய் வந்து படுத்து உறங்கினால் மிஸ்டர். கிளீன்களுக்கு அறவே ஆகாது. ஆனால், ஆச்சரியத்தின் உச்சம் என்னவென்றால், சமீபத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ’எலிசபெத் ஹோர்டு’ என்பவர் நீண்ட நாட்களாக வளர்த்து வந்த நாயை திருமணம் செய்துகொண்டார் என்பதே!
நாய்களுக்கு கண் பார்வை மிகவும் தெளிவாக இருக்கும். தூரத்தில் ஒருவர் வந்தாலும் அவர் நம் வீட்டில் உள்ளவரா, தெருவுக்கு புதியவரா, சந்தேகிக்கும்படியானவரா, திருடரா என்பதை டிடெக்டிவ் இல்லாமலேயே அறிந்துவிடும். அதிவேகமாக ஓடக்கூடிய நாய், ஓடுவது மட்டுமல்ல நடந்து சென்றாலே எந்த கால்களை நாய் முதலில் வைக்கிறது என்பதை நாம் பார்க்க இயலாது.
சமீபத்தில் ஒரு ஆய்வில், நாயினால் புற்றுநோயை அறியக்கூடிய திறன் உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாய்கள் தொடர்பாக ஆச்சரியப்படக்கூடிய விஷயங்களும், திகைக்க வைக்கும்படியான விஷயங்களுமே ஏராளமாக உள்ளன. அப்படியுள்ள நாய்களின் இனத்தை நாம் பாதுகாக்க வேண்டும். அனைவருக்குமான காவலாளி அவன். அவன் இனத்தை காக்க வேண்டும்...