கற்றலுக்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்து, மத்திய அரசின் நாரி சக்தி புரஸ்கார் விருது பெற்ற கேரளாவின் 98 வயதான கார்த்தியாயினி அம்மா, அவரது இரு மாத ஓய்வூதியத்தில் இருந்து சேர்த்த பணத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக அறிவித்தார்.
இதற்கு கேரளாவின் உள்ளாட்சி அரசாங்கத்திற்கான அமைச்சர் மொய்தீன் உடனடியாக பதிலளித்து, 'இது பணத்தின் அளவை பொறுத்தது அல்ல, அதை கொடுப்பவருக்கான நல்ல மனதைப் பொறுத்தது' என்று மனதாரப் பாராட்டினார்.
இதைத் தொடர்ந்து கார்த்தியாயினி அம்மாவின், நிவாரண நிதி தரும் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அமைச்சர் மொய்தீன், ஹரிபட்டின் முட்டோமில் என்னும் இடத்தில் உள்ள கார்த்தியாயினி அம்மாவின் வீட்டிற்குச் சென்றார்.
அப்போது அந்த அமைச்சரிடம், கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்ளும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதி பங்களிப்பாக, கார்த்தியாயினி அம்மா தான் இரண்டு மாதங்களாக பெற்ற முதியோர் ஓய்வூதியமான ரூ.3 ஆயிரத்தைக் கொடுத்தார்.
'கேரள நெருக்கடிகளைத் தடுக்க உதவுவதற்கு இன்னும் நிறைய செய்ய விரும்பினாலும், என்னால் இவ்வளவு பணம்தான் திரட்ட முடிந்தது' என்றும் கார்த்தியாயினி அம்மா அமைச்சரிடம் விளக்கமளித்தார்.
இது குறித்து அமைச்சர் மொய்தீன் கூறுகையில், 'தன்னுடைய பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியிலும், கார்த்தியாயினி அம்மா தன்னால் முடிந்ததை மாநில நிவாரணத்திற்காக கொடுத்துள்ளார். அவர் தனது அன்பான செயல் மூலம் சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாக உள்ளார்' என்றார்.
கேரளாவின் கார்த்தியாயினி அம்மா ஒரு வாழும் உதாரணம் ஆவார். இவர் 2018ஆம் ஆண்டு சக்ரத மிஷன் நடத்திய கல்வியறிவு தேர்வில் முதல் இடத்தைப் பிடித்தார்.
தற்போது கணினி அறிவியல் பயிலும் இவர், பத்தாம் வகுப்பு தேர்வுக்கும் தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'நண்பர் உடலுடன் 4 நாள் பயணம், கரோனா பாதிப்புக்கு நிதியுதவி'- இளைஞருக்கு முதலமைச்சர் பாராட்டு!