முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் நூற்றாண்டு விழாவை தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி நேற்று (ஜூலை 24) தொடங்கிவைத்தது. இதற்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடிதம் மூலமாக வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், முன்னாள் பிரதமரும் பொருளாதார அறிஞருமான மன்மோகன் சிங் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர், ”1991ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நரசிம்ம ராவின் தலைமையின் கீழ் நிதியமைச்சர் பொறுப்பிலிருந்த நான் வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்டை தாக்கல் செய்தேன். பொருளாதாரச் சீர்திருத்தம், தாராளமயம் ஆகியவற்றை உள்ளடக்கிய சிறப்புமிக்க பட்ஜெட்டாக அது அமைவதற்கு நரசிம்ம ராவின் தீர்க்கமான முடிவே காரணம். நாட்டின் தேவையை உணர்ந்து அவர் எடுத்த முடிவே இந்தியா இத்தகைய வளர்ச்சியைப் பெறக் காரணமாகும். அவர் இந்தியாவின் தலைசிறந்த மைந்தர்களில் ஒருவர்” எனக் கூறினார்.